Pages

Tuesday, September 22, 2015

'கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ்' படிப்பா? கவலை வேண்டாம் இனி; வேலை உண்டு!

'திறந்தவெளி மற்றும் தொலைதுார கல்வியில் வழங்கப்படும், அனைத்து பட்டம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள், அரசு வேலைவாய்ப்பு மற்றும் உயர்படிப்புகளுக்கு செல்லத்தக்கவை' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில், பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி., அனுமதியுடன், அண்ணாமலை பல்கலை உட்பட, சில பல்கலைகளில், 1979 முதல் திறந்த நிலை மற்றும் தொலைதுார கல்வியில், பட்டம் மற்றம் பட்டயப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.

துவக்கத்தில், இந்த முறையில் படித்து பட்டம் பெற்றவர்களுக்கு, அரசு நிறுவனங்களில், வேலைவாய்ப்பு தரப்பட்டதோடு, உயர்கல்வி கற்கவும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன், திறந்தநிலை பல்கலையால் வழங்கப்பட்ட, பிளஸ் 2 படிக்காமல், நேரடி பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது.
பின், பிளஸ் 2 முடித்து, திறந்தநிலை படிப்பில், இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு மட்டும் அனுமதி தரப்பட்டது. இதனால், பிளஸ் 2 படிக்காமல், நேரடி இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள், அரசு வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்விக்கு செல்ல முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.இந்நிலையில், மத்திய அரசு, இரு தினங்களுக்கு முன், புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், 'திறந்த நிலை பல்கலையின் பட்டப்படிப்புகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள், அரசின் வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்விக்கு செல்லத்தக்கவை' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த அறிவிப்பால், திறந்தநிலை படிப் பில், பட்டம் பெற்ற லட்சக்கணக்கானோர் அரசு வேலைவாய்ப்பு பெறும் வகையில், புதிய நம்பிக்கை பெற்றுள்ளனர்.
அரசாணை சொல்வது என்ன?
கடந்த, 1956ம் ஆண்டு யு.ஜி.சி., சட்டப்பிரிவு - 3ன் படி நடத்தப்படும் நிகர்நிலை பல்கலை, மத்திய, மாநில அரசின் சட்டப்படி துவங்கப்பட்ட பல்கலைகளில், யு.ஜி.சி., அனுமதி பெற்று வழங்கப்பட்ட அனைத்து பட்டங்கள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள், அனைத்து வகை அரசு வேலைவாய்ப்புக்கும் தானாகவே செல்லத்தக்கவை.
குழப்பம்மத்திய அரசின் உத்தரவுப்படி, திறந்த நிலை கல்வியில் பெற்ற பட்டங்கள், வேலைவாய்ப்புக்கு செல்லத்தக்கவை என்றாலும், எப்போது முதல் வழங்கப்பட்ட பட்டங்கள் என்பது அரசாணையில் தெளிவாக இல்லை.
அதனால், பிளஸ் 2 முடிக்காமல், நேரடியாக பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு இந்த அரசாணை பொருந்துமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.சட்ட அந்தஸ்துஇதுகுறித்து, அண்ணாமலை பல்கலை துணைவேந்தர் எஸ்.மணியன் கூறியதாவது:கடந்த, 1979 முதல் யு.ஜி.சி., அனுமதியுடன் தான், எங்கள் பல்கலையில் பட்டங்கள் வழங்கப்படுகின்றன.
இந்தியாவில் உரிய வயதில் உயர்கல்வியை முறையாக படிக்க முடியாத லட்சக்கணக்கானோருக்கு, திறந்தநிலை படிப்பு மூலம் வாய்ப்பளித்தோம். எங்கள் பல்கலை வழங்கிய அனைத்து பட்டங்களும் சட்ட அந்தஸ்து பெற்றவை தான்.இவ்வாறு அவர் கூறினார்.அதிகாரிகள் சிலர் கூறும்போது, 'பிளஸ் 2 முடிக்காமல் பெற்ற பட்டங்கள் குறித்து, மத்திய, மாநில அரசுகள், யு.ஜி.சி., தான் தெளிவாக அறிவிக்க வேண்டும்' என்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.