Pages

Thursday, September 10, 2015

காதல் திருமணம் செய்த ஆசிரியர் பாடம் நடத்த அனுமதி மறுப்பு

சென்னை, ராயபுரத்தில், அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி உள்ளது; இங்கு, ஆறு முதல், 10ம் வகுப்பு வரை, தமிழ் பாடம் எடுக்கும் பட்டதாரி ஆசிரியர், அதே பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியையை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதற்கு, பள்ளி நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திருமணத்துக்குப் பின், அந்த ஆசிரியை வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டார். ஆசிரியருக்கு, பள்ளி நிர்வாகம் பணி மாறுதலும் அளிக்கவில்லை; மாறாக, 100 நாட்களாக பள்ளியில் பாடம் நடத்த, அனுமதி மறுத்துள்ளது; தினமும், பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு, செல்லும்படி கூறியுள்ளது. 

அதனால், இந்த பள்ளியில், ஆறு முதல், 10ம் வகுப்பு வரை, மூன்று மாதங்களாக, தமிழ் பாடம் நடத்தப்படவில்லை. இதுகுறித்து, ஆசிரியர் சங்கங்களின் சார்பில், பள்ளி நிர்வாகம், பள்ளிக்கல்வி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னை கிழக்கு மாவட்ட கல்வி அதிகாரியும், பள்ளிக்கு சாதகமாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.எனவே, சென்னையிலுள்ள அரசு, அரசு உதவிபெறும், மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து, நேற்று, கிழக்கு மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து, ஆசிரியர்கள்  அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சுரேஷ் கூறியதாவது:
சென்னையில், அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஆசிரியர்கள் கொத்தடிமைகள் போல நடத்தப்படுகின்றனர். பாடம் நடத்த விடாமல், தங்கள் சொந்த பணிகளை பார்க்க அனுப்புகின்றனர். இரண்டு ஆசிரியர்கள் மனமொத்து திருமணம் செய்ததை, பள்ளி நிர்வாகம் கொச்சைப்படுத்தி, ஆசிரியரை பள்ளிக்குள்ளேயே விடாமல், 100 நாட்களாக அவமானப்படுத்துகிறது. இதனால், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து புகார் அளித்தால், மாவட்ட கல்வி அதிகாரி, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.