Pages

Thursday, September 3, 2015

திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் அடுத்த ஆண்டு முதல் பி.எஸ்சி. படிப்புகள் அறிமுகம்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் அடுத்த ஆண்டு முதல் பி.எஸ்சி. அறிவியல் பட்டப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. 2016-17 கல்வியாண்டு முதல் இந்தப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையையும் பல்கலைக்கழகம் நடத்த உள்ளது.
தொலைநிலைக் கல்வி வாயிலாக விலங்கியல், தாவரவியல், வேதியியல், இயற்பியல் தொடர்பான இளநிலை பட்டப் படிப்புகள் தொடங்கப்பட உள்ளன என தமிழக அரசின் உயர் கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2015-16 இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தப் படிப்புகளைத் தொலைநிலைக் கல்வி முறையில் அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஏற்கெனவே மேற்கொண்டு தயார் நிலையில் உள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்திரகாந்தி ஜெயபாலன் தொலைபேசி மூலம் "தினமணி'க்கு அளித்த பேட்டி: தொலைநிலைக் கல்வி முறையில் பி.எஸ்சி. விலங்கியல், தாவரவியல், வேதியியல், இயற்பியல் படிப்புகளை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளை பல்கலைக்கழகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்தப் படிப்புகளை அறிமுகம் செய்வதற்கு பல்கலைக்கழகத்தின் கல்வி வாரியக் குழு, ஆட்சிமன்றக் குழு ஆகியவற்றின் ஒப்புதலும் பெறப்பட்டு விட்டது. இந்த அறிவியல் படிப்புகளில் இடம்பெறும் செய்முறை பயிற்சிகளை மாணவர்கள் நேரடியாக மேற்கொள்ள வசதியாக அந்தந்தப் பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட கல்லூரிகளில் ஏற்பாடு செய்து தரப்படும்.

செய்முறைத் தேர்வையும் அந்தக் கல்லூரியிலேயே மாணவர்கள் மேற்கொள்ளலாம். இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளைப் பல்கலைக்கழகம் அடுத்தகட்டமாக எடுக்க உள்ளது. எனவே, அறிவியல் பட்டப் படிப்புகளைத் தொலைநிலைக் கல்வி முறையில் அறிமுகம் செய்வதில் எந்தச் சிக்கலும் இல்லை. 2016-17 கல்வியாண்டு முதல் இந்தப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்றார். இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) துணைத் தலைவர் ஹெச். தேவராஜ் கூறியது: அடிப்படை அறிவியல் படிப்புகளை ஏற்கெனவே சில கல்வி நிறுவனங்கள் தொலைநிலைக் கல்வி முறையில் வழங்குவதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.

அவ்வாறு தொலைநிலைக் கல்வி மூலம் இந்தப் படிப்புகளை நடத்துவது சாத்தியமில்லாத ஒன்று. செய்முறை பயிற்சிகளை மாணவர்கள் முழுமையாகப் பெறுவது கடினம். இதற்கு யுஜிசி அனுமதி வழங்காது. இருந்தபோதும் இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார்.

1 comment:

  1. அறிவியல் பட்ட படிப்புக்களை தபால் வழியில் போதிப்பது சாியானதல்ல. கல்வித்தரம் குறைந்து பாழ்பட்டுப் போவதற்குதான் பயன்படும். வெறும்ஊக்க ஊதியம் பெறுவதற்கு படித்து விட்டு பதவிஉயா்வு பெறுவோா்கள் தக்க புலமையின்றி மாணவர்கள் கல்வியைப் பாழாக்கி வருகின்றாா்கள். கசப்பான உண்மைதான் என்றாலும் உண்மைதான். தபால் வழியில் பட்டம் பெற்றால் ஆசிரியா்களுக்கு ஊக்க ஊதியம் மட்டும் வழங்கலாம்.பதவி உயா்வு வழங்கக கூடாது.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.