மத்திய அரசு பள்ளிகளில், சமஸ்கிருதம் கட்டாயம் ஆக்கப்படவில்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், சமஸ்கிருத ஆசிரியர்களுக்கு, 70 வயது வரை பணிபுரிய வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றது முதல், சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆண்டுதோறும் சமஸ்கிருத வாரம் கொண்டாடப்படுகிறது.சமஸ்கிருத மொழி பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி தொடர்பாக, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில், 'சமஸ்கிருத பாரதி' என்ற அமைப்பின் மூலம் கல்லுாரிகளில் சமஸ்கிருத வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன.
இந்நிலையில், மும்மொழிக் கொள்கை மூலம் சமஸ்கிருதத்தை கட்டாயமாக்க முயற்சிப்பதாக, சில தமிழக கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.இதையடுத்து, 'சமஸ்கிருதத்தை கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை' என, மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
பார்லிமென்டில், பா.ஜ., - எம்.பி., ரவீந்திர குஷ்வாகா, 'மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிகளில், சமஸ்கிருதம் கட்டாயமாக பயிற்றுவிக்கும் திட்டம் உள்ளதா' என, எழுத்துப்பூர்வமாக கேட்டிருந்த கேள்விக்கு, 'அதுபோன்ற திட்டம் எதுவும் அரசிடம் இல்லை' என, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் கூறியுள்ளார்.
இதற்கிடையில், சமஸ்கிருத பல்கலைகளில் ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளதால், அந்த இடத்தை நிரப்பும் வரையில், சமஸ்கிருத ஆசிரியருக்கான ஓய்வு வயது, 62லிருந்து, 65 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. 'உடலில் திடமிருந்தால், 70 வயது வரை, பணியாற்ற சலுகை உண்டு' என, மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment