சமையல் எரிவாயு உருளை விநியோக ஊழியர்கள் கட்டாயப்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலித்தால், செல்லிடப்பேசி எண் மூலம் புகார் அளிக்குமாறு, முகவர்கள் தங்கள் வாடிக்கையாளருக்கு குறுந்தகவல்களை அனுப்பி வருகின்றனர்.
கட்டாய வசூல்: பெரும்பாலான இடங்களில் விநியோக ஊழியர்கள், ஒரு எரிவாயு உருளைக்கு ரூ.25 முதல் ரூ.35 வரை ரசீது தொகையை விட கூடுதலாகப் பணம் வசூலிக்கின்றனர். சில இடங்களில் ரூ.50 வரை தரவேண்டும் என்று கட்டாயப்படுத்தி பணம் பெறுகின்றனர். அவர்கள் கேட்கும் தொகையைத் தராவிட்டால் அடுத்தமுறை எரிவாயு உருளைகளை எடுத்து வர தாமதப்படுத்துவார்களோ என்ற அச்சம் காரணமாக வேறுவழியின்றி அவர்கள் கேட்கும் தொகையக் கொடுக்க வேண்டியுள்ளது என வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர்.
கூடுதல் பணம் தர வேண்டிய அவசியம் இல்லை: இதுகுறித்து முகவர்களிடம் கேட்டபோது, சமையல் எரிவாயு உருளைகளைப் பெறும் வாடிக்கையாளர்கள் தங்கள் ரசீதில் உள்ள தொகையை மட்டும் செலுத்தி எரிவாயு உருளைகளைப் பெற்றுக் கொள்ளலாம். விநியோக ஊழியருக்கு கூடுதல் பணம் தர வேண்டிய அவசியமில்லை.
கட்டாயப்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலித்தால், புகார் தெரிவிக்குமாறு எண்ணெய் நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு தற்போது எஸ்.எம்.எஸ்., அனுப்பி வருகிறோம். அந்த எஸ்.எம்.எஸ்.-இல் குறிப்பிட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணைத் தொடர்புகொண்டு வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்தனர்.
புகார் அளிக்கும் வசதி: சமையல் எரிவாயு உருளைகளைப் பயன்படுத்தும் அனைத்து எண்ணெய் நிறுவன வாடிக்கையாளர்களுக்கும் பயன்படும் வகையில் www.mylpg.in என்ற இணையதளமும், அனைத்து எண்ணெய் நிறுவன வாடிக்கையாளர்களும் புகார் தெரிவிக்க 18002333555 என்ற இலவச தொலைபேசி எண்ணும் செயல்பட்டு வருகின்றன.
இதன் மூலமும் வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.