Pages

Wednesday, September 9, 2015

தமிழகத்திலும் பி.எட். படிப்புக்கு இரண்டு ஆண்டுகள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழகத்திலும் பி.எட், எம்.எட். ஆசிரியர் கல்விப் படிப்புகளின் படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகள் என்பதை தமிழக அரசு இறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.
இதில் பி.எட். படிப்புக்கு இந்தக் கல்வியாண்டு (2015-16) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 28-ஆம் தேதி தொடங்கி 6 நாள்கள் நடத்தப்பட உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் (என்.சி.டி.இ.) புதிய (2014) வழிகாட்டுதல்படி, பி.எட், எம்.எட். படிப்புகளின் படிப்புக் காலம் இந்தக் கல்வியாண்டு (2015-16) முதல் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது.


இதை, பிற மாநிலங்கள் அனைத்தும் ஏற்று நடைமுறைப்படுத்திய நிலையில், தமிழகம் மட்டும் எதிர்ப்புத் தெரிவித்தது. தமிழகத்திலுள்ள சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரி நிர்வாகிகள் சங்கம் இந்தப் புதிய வழிகாட்டுதலை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் நிகழாண்டில் பி.எட். படிப்புக் காலம் ஓராண்டா, இரண்டு ஆண்டுகளா என்ற குழப்பம் நீடித்து வந்தது. மேலும், இந்தப் படிப்பில் நிகழாண்டு மாணவர் சேர்க்கையும் தாமதமாகி வந்தது. இதனிடையே, மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை, சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்டது.

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோதும், மாணவர் சேர்க்கைக்கான ஆயத்தப் பணிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டது. இந்த நிலையில், பி.எட், எம்.எட். படிப்புக் காலம் நிகழாண்டில் தமிழகத்திலும் இரண்டு ஆண்டுகள்தான் என்பதை தமிழக அரசு இறுதி செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இதுகுறித்து விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவன முதல்வரும், பி.எட். மாணவர் சேர்க்கை செயலருமான ஆர்.பாரதி கூறியது:
 என்.சி.டி.இ. வழிகாட்டுதலின் படி, தமிழகத்திலும் நிகழாண்டு முதல் பி.எட். படிப்புக் காலத்தை இரண்டு ஆண்டுகளாக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்து, உத்தரவிட்டுள்ளது. எனவே, நிகழாண்டில் பி.எட், எம்.எட். படிப்புகளில் சேரும் மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் படித்தாக வேண்டும்.
 மேலும், பி.எட். படிப்புக்கான கலந்தாய்வு வரும் 28-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. முதல் நாளில் காலையில் மாற்றுத் திறனாளிகளுக்கும், மதியம் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கும் கலந்தாய்வு நடத்தப்படும்.
 செப்டம்பர் 29-ஆம் தேதி கணிதப் பாடப் பிரிவினருக்கும், 30-ஆம் தேதி இயற்பியல், வேதியியல் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடத்தப்படும்.
 அக்டோபர் 1-ஆம் தேதி தாவரவியல், விலங்கியல் பிரிவினருக்கும், 3-ஆம் தேதி தமிழ், ஆங்கிலப் பாடப் பிரிவினருக்கும், 5-ஆம் தேதி காலையில் வரலாறு, புவியியல் வணிகவியல் பிரிவினருக்கும், மதியத்தில் பொருளாதாரம், மனை அறிவியல் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடத்தப்படும்.
 இதுதொடர்பான அறிவிப்பு கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்படும் என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.