Pages

Friday, September 11, 2015

காதல் திருமணம்: ஆசிரியரை வெளியேற்றிய பள்ளிக்கு எச்சரிக்கை

காதல் திருமணம் செய்த தமிழ் ஆசிரியரை, பணி செய்ய விடாமல் தடுத்த தனியார் பள்ளி மீது, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது; ஆசிரியரை பள்ளியில் சேர்க்கும்படி உத்தரவிட்டுள்ளது. சென்னை ராயபுரத்தில், தனியாரால் நிர்வகிக்கப்படும், வள்ளல் எட்டியப்ப நாயக்கர் பள்ளி உள்ளது. இங்கு தமிழாசிரியராக பணிபுரிபவர் பூங்காவனம். இவரும், அதே பள்ளியில் பணியாற்றிய ஆசிரியை ஒருவரும், காதலித்து திருமணம் செய்தனர்.


இதை பள்ளி நிர்வாகம் விரும்பவில்லை. அதனால், 'பள்ளிக்கு வந்து பதிவேட்டில் கையெழுத்திட்டதும், சென்று விட வேண்டும்; மாணவர்களுக்கு பாடம் நடத்தக் கூடாது' என, ஆசிரியர் பூங்காவனத்திற்கு, பள்ளி நிர்வாகம் தடை விதித்தது; 100 நாட்களாக இந்த தடை நீடித்தது.

இதுபற்றி ஆசிரியர் சங்கங்களில், பூங்காவனம் புகார் அளித்தார். உடன், அனைத்து ஆசிரியர்களின் சென்னை கூட்டுக் குழுவான - 'ஜாக்' அமைப்பு சார்பில், நேற்று முன்தினம், சென்னை கிழக்கு மாவட்ட அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

இதையடுத்து, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனிதா, கிழக்கு மாவட்ட கல்வி அதிகாரி நாகராஜன் ஆகியோர், பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

'அரசு நிதியில், ஆசிரியருக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. அவரை பள்ளிக்குள் அனுமதித்து பாடம் நடத்த உத்தரவிட வேண்டும்; இல்லையென்றால், விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்புவதுடன், பள்ளி மீது நடவடிக்கையும் எடுக்கப்படும்' என, பள்ளி நிர்வாகத்தினரை, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனால், ஆசிரியர் மீண்டும் பணிக்கு சென்று, பாடம் நடத்தும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.