Pages

Tuesday, September 15, 2015

வெர்ச்சுவல் கிளாஸ் திட்டம் 25 அரசு பள்ளிகளில் துவங்க ஏற்பாடு

25 அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் வெர்ச்சுவல் கிளாஸ் திட்டம் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசு கல்வியை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. குறிப்பாக, எளிய முறையில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க வசதியாக மெய் நிகர் வர்க்கம் வகுப்பறை (வெர்ச்சுவல் கிளாஸ்) என்ற திட்டத்தை அரசு பள்ளிகளில் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், மாநில ஆசிரியர் பயிற்சி கல்வி மையம் மூலமாக மாவட்டம் வாரியாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பள்ளிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


அதன்படி, கடலுார் மாவட்டத்தில், காரைக்காடு, குள்ளஞ்சாவடி, லால்பேட்டை, சி.முட்லுார், மஞ்சக்குப்பம், மஞ்சக்கொல்லை, நடுவீரப்பட்டு, வல்லத்துறை, கம்மாபுரம், கஞ்சங்கொல்லை, முட்டம் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகள், திட்டக்குடி, விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, விருத்தாசலம், பேர்பெரியாங்குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வேப்பூர் மாதிரி மேல்நிலைப் பள்ளி, ஆடூர் அகரம், கீரப்பாளையம், கண்டரக்கோட்டை, எறுமனுார், அம்பலவாணன்பேட்டை, அங்குசெட்டிப்பாளையம், கவரப்பட்டு, மேல்பட்டாம்பாக்கம் ஆகிய அரசு உயர்நிலைப் பள்ளி, தொழுதுார் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி என, மொத்தம் 25 பள்ளிகளில் வெர்ச்சுவல் கிளாஸ் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக பிராட் பேன்ட் இணைப்பு வசதியை ஏற்படுத்துமாறு அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்டத்தில் 25 அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் வெர்ச்சுவல் கிளாஸ் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்குத் தேவையான பிராட் பேன்ட் இணைப்பு வசதி பெரும்பாலான பள்ளிகளில் உள்ளது. சில பள்ளிகளில் மட்டுமே இவை இல்லை. பிராட் பேன்ட் வசதி இல்லாத பள்ளிகளில் அந்த வசதியை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


புரொஜக்டர், ஸ்கிரீன் என, பல்வேறு உபகரணங்கள் படிப்படியாக வர உள்ளது. பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு எளிய முறையில் பாடம் நடத்தப்படும். மேலும் பள்ளிக் கல்வித்துறை, மாநில ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களில் இருந்து பாடம் கற்பிக்கப்படும். சந்தேகங்களை மாணவர்கள் இங்கிருந்தபடியே நேரடியாக கேட்டு விளக்கம் பெறலாம் என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.