Pages

Tuesday, September 15, 2015

2016-இல் பொறியியல் முடிப்பவர்களில் 600 பேருக்கு இலவசத் திறன் பயிற்சி: அண்ணா பல்கலை. ஏற்பாடு

பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், இணைப்புக் கல்லூரிகளில் வருகிற 2016-இல் படிப்பை முடிப்பவர்களில் 600 பேருக்கு இலவசமாக வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டுப் பயிற்சியை அண்ணா பல்கலைக்கழகம் அளிக்க உள்ளது.  அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக-தொழில் கூட்டுறவு மையமும், "ரெனால்ட் நிஸ்ஸான்' தொழில்நுட்ப வர்த்தக மையம் என்ற இந்திய தனியார் நிறுவனமும் இணைந்து இந்தப் பயிற்சித் திட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளன.

 இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி: "விஷன் தமிழ்நாடு 2023' திட்டம் பன்னாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்களை வெகுவாக ஈர்த்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஏராளமான நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்து வருகின்றன.
 இதனால், பயிற்சிபெற்ற திறன்மிக்க மனித ஆற்றலின் தேவை அதிகரித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு அண்ணா பல்கலைக்கழகம், ரெனால்ட் நிஸ்ஸான் தொழில்நுட்ப வர்த்தக மைய நிறுவனத்துடன் இணைந்து இந்தப் பயிற்சித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், இணைப்புக் கல்லூரிகளில் இயந்திரவியல், ஆட்டோமொபைல், உற்பத்தி, மெட்டாலரஜி உள்ளிட்ட துறைகளில் இருந்து 2016-இல் படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்களுக்கு இந்த இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
 சென்னை, மதுரை, கோவை என மூன்று மண்டலங்களில், மண்டலத்துக்கு 200 பேர் வீதம் 600 பேருக்கு 10 நாள்கள் இந்தப் பயிற்சி அளிக்கப்படும்.
 அதுமட்டுமின்றி ரெனால்ட் நிஸ்ஸான் தொழில்நுட்ப நிறுவனம், நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு திட்டத்தின் கீழ் படிப்பில் சிறந்து விளங்கும் 40 மாணவிகள், 20 மாணவர்கள் என மொத்தம் 60 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்க உள்ளது.
 மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 துறைகளில் பல்வேறு பொறியியல் பிரிவுகளின் கீழ் படிப்பில் சிறந்து விளங்கும் இறுதியாண்டு மாணவர்கள் 60 பேருக்கு மேம்பட்ட திறன் வளர்ப்புப் பயிற்சித் திட்டமும் அறிமுகம் செய்யப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.