புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரில் ஆதரவு தெரிவித்தனர்.
தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை- சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் போராட்டத்துக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் ஆதரவு தெரிவித்தனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடக்கி வைத்த மு.க.ஸ்டாலின், "மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளனர். இந்தக் கோரிக்கைகளுக்கு திமுக முழுமையான ஆதரவை அளிக்கிறது' என்றார்.
ராமதாஸ்: உங்கள் போராட்டத்துக்கு பாமக முழு ஆதரவு அளிக்கிறது. தமிழகத்தில் கல்வி வணிகமாக மாறிவிட்டது.ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்கும், பணக்காரர்களுக்கும் என தனித்தனியான கல்வி உள்ளது. சமச்சீர் கல்வி பெயரளவில் மட்டுமே அமல்படுத்தப்படுகிறது. ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு இணையான கல்வி கிடைக்க வேண்டும்.
தொல்.திருமாவளவன்: ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை தமிழக அரசு உடனடியாகக் களைய வேண்டும். மத்திய அரசின் பாடத்திட்டத்திலோ, ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதத்திலோ, எதிலும் முரண்பாடு இருக்கக் கூடாது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட தலைவர்களும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆதரித்துப் பேசினர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.