Pages

Monday, August 24, 2015

கல்வித்துறையின் நடவடிக்கை:தலைமை ஆசிரியர்கள் அதிருப்தி

பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பள்ளி கல்வித்துறையின் உத்தரவால், தலைமை ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சமீபகாலமாக பொதுமக்கள் நடத்தும் போராட்டங்களில், பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்பது அதிகரித்துள்ளது.


குடிநீர் வினியோகம், ரோடு பிரச்னை, சாக்கடை வசதியின்மை, சுகாதார சீர்கேடு போன்றவற்றை சுட்டிக்காட்டி, பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.இதுபோன்ற போராட்டங்கள் சிலவற்றில், பள்ளி சீருடையில் மாணவ, மாணவியரும் பங்கேற்கின்றனர். பெற்றோர்களுடன் ரோட்டில் அமர்ந்து, மறியலில் ஈடுபடுகின்றனர்.சமீபத்தில், "டாஸ்மாக்' மதுக்கடைகளை மூடக்கோரியும், பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும் போராட்டங்கள் நடந்தன. இதில் பல இடங்களில், மாணவ, மாணவியரும் பங்கேற்றனர். இதை கவனித்த பள்ளி கல்வித்துறை, தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியது. அதில், "இதுபோன்ற போராட்டங்களால் மாணவ, மாணவியரின் கல்வி பாதிக்கப்படும்; அவர்களுக்கு அறிவுரை வழங்கி, போராட்டங்களில் பங்கேற்காமல் தவிர்க்க செய்ய வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டது.இதுபோன்ற போராட்டங்களில் மாணவ,மாணவியர் ஈடுபடும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கைஎடுக்கப்படும் எனவும், அதில் எச்சரிக்கப்பட்டது. பள்ளி கல்வித்துறையின் இந்த எச்சரிக்கை, தலைமை ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி வளாகம், வகுப்பறையில் மட்டுமே மாணவ, மாணவியர் தலைமை ஆசிரியர்களின்கட்டுப்பாட்டில் உள்ளனர்; வசிப்பிடம் மற்றும் பொது இடங்களில் நடக்கும் போராட்டங்களில், மாணவ, மாணவியர் பங்கேற்றால், அதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் எவ்வகையில் பொறுப்பேற்க முடியும் என, கேள்வி எழுப்புகின்றனர்.சில பெற்றோரே, குழந்தைகளை போராட்ட களத்துக்கு அழைத்துச் சென்று, அவர்களை ஊக்கப்படுத்துகின்றனர். எனவே, மாணவர்கள்போராட்ட பிரச்னையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கை, அதிருப்தி அளிப்பதாக, தலைமை ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.