Pages

Tuesday, August 4, 2015

நல்லாசிரியர் விருது வழங்குவதில் அரசியல் தலையீடு

தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்குவதில், அரசியல் தலையீடு அதிகரித்துள்ளது. விதிகளுக்கு முரணாக, அரசியல் கட்சி சார்பான ஆசிரியர்களுக்கு முன்னுரிமை தருவதாக புகார்கள் எழுந்துள்ளன. ஆசிரியர் தினமாக அனுசரிக்கப்படும், செப்., 5ம் தேதி, தமிழகத்தில் சிறப்பாக கல்வி சேவை புரிந்த ஆசிரியர்களுக்கு, நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.


தொடக்கக் கல்வி:

பள்ளிக்கல்வி இயக்குனரகக் கட்டுப்பாட்டில் உள்ள, 67 கல்வி மாவட்டங்கள்; தொடக்கக் கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டில் உள்ள, 140க்கும் மேற்பட்ட தொடக்கக் கல்வி மாவட்டங்கள்; மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன அலுவலகங்களில் பணியாற்றும் ஆசிரியர், 350 பேருக்கு விருது வழங்கப்படும்.
இத்துடன், மெட்ரிக் இயக்குனரகக் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர், 20 பேருக்கும் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.இந்த விருதுக்கு தகுதியானவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி, தற்போது நடந்து வருகிறது. குறைந்தபட்சம், 15 ஆண்டு ஆசிரியர் பணியில் இருந்தவர், இந்த விருதுக்கு தகுதியானவர். தலைமை ஆசிரியர் பெயரும்,விருதுக்கு தேர்வு செய்யப்படுகிறது.


நிபந்தனைகள்:

* மாணவர் நலனுக்காக பாரபட்சமின்றி பணியாற்றி இருக்க வேண்டும்.
* கல்விச் சேவையை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.
* எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பு இருக்கக் கூடாது.
* ஒழுங்கீன நடவடிக்கை மற்றும் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவராக இருக்கக் கூடாது.
இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு, மாவட்டக் கல்வி அதிகாரி தலைமையிலான குழு, தற்காலிக பட்டியல் தயாரித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியிடம் வழங்க வேண்டும். அவர், ஆக., 3ம் தேதிக்குள் நேர்காணல் நடத்தி, ஆறு பேர் கொண்ட தேர்வு பட்டியலை, இடைநிலைக் கல்வி இணை இயக்குனர் தலைமையிலான மாநிலக் குழுவுக்கு அனுப்ப வேண்டும். இந்தக் குழு, இறுதி பட்டியலை தயாரித்து, அரசுக்கு அனுப்பும்.

அலையும் நிலை:

தற்போது, இறுதிப் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால், ஆசிரியர்கள் மற்றும் சில சங்கங்களைச் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சி மற்றும் உயர் அதிகாரிகளின் சிபாரிசுக்காக அலையும் நிலை ஏற்பட்டு உள்ளது.அரசியல் தலையீட்டால் மட்டுமே, நல்லாசிரியர் விருது பட்டியல் தயாராவதாக, ஆசிரியர் சங்கங்கள், பகிரங்கமாக புகார் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து, தமிழ்நாடு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க பொதுச் செயலர் சத்தியமூர்த்தி  கூறியதாவது:நல்லாசிரியர் விருது, பெரும்பாலானவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்படுவதில்லை; வாங்கப்படுகிறது. அரசியல் தலையீட்டால் ஆசிரியர் பெயர் தேர்வு செய்யப்பட்டு, குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களும், ஒழுங்கீன நடவடிக்கைக்கு உள்ளாவோரும் தேர்வாகின்றனர். அதனால், உண்மையில் சேவை நோக்கம் கொண்டவர்களுக்கு, விருது கிடைப்பதில்லை. இந்த ஆண்டாவது, அரசியல் தலையீடு இல்லாமல் சிறந்த ஆசிரியரை தேர்வு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.