மாநிலம் முழுவதிலும் அரசு, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் ஆதார் அடையாள அட்டை உள்ளவர்கள் விவரங்கள் சேகரிக்கும் பணியில் கல்வித் துறை தீவிரம் காட்டி வருகிறது. வரும் காலங்களில் கல்வி உதவித் தொகை உள்ளிட்டவைகளை இதன் மூலம் அளிப்பதற்காக பட்டியல் திரட்டப்படுவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நாடு முழுவதிலும் 5 வயதுக்கு மேல்பட்ட ஆண், பெண் அனைவருக்கும் ஆதார் அடையாள அட்டை வழங்கும் பணியை மத்திய அரசு செய்து வருகிறது. தமிழகத்தில் 32 மாவட்டங்களில் சுமார் 80 சதம் பேருக்கு ஆதார் அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளது. எஞ்சியவர்கள் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாநிலம் முழுவதிலும் அரசு, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை உள்ளிட்டவற்றை நேரடியாகச் சென்றடையச் செய்யும் நோக்கில் அரசு, தனியார் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வரையில் பயிலும் மாணவ, மாணவிகளிடம் ஆதார் அடையாள அட்டை எண் விவரங்களை சேகரித்து கல்வித்துறையிடம் இந்த வார இறுதிக்குள் சமர்ப்பிக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விவரங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
தருமபுரி மாவட்டத்தில் 89 அரசு உள்பட 139 மேல்நிலைப் பள்ளிகளும், 212 அரசு உள்பட 293 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் நடுநிலை, தொடக்கப் பள்ளிகள் உள்ளன.
மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் சுமார் 2,50,000 மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர். இவர்களில் 60 சதம் பேரின் ஆதார் அடையாள அட்டை எண் விவரங்கள் சேகரிக்கப்பட்டு கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி கூறியது: மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் கல்வி பயிலும் மாணவ, மாணவியரின் ஆதார் எண் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரையில் 60 சத மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டு விட்டன. எஞ்சியவர்களிடம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.