Pages

Thursday, July 9, 2015

ஏழை மாணவர்களை சேர்க்க மறுத்தால் புகார் தெரிவிக்கலாம்

தனியார் பள்ளிகளில், 25 சதவீத ஒதுக்கீட்டில், ஏழை மாணவர்களைச் சேர்க்க மறுத்தால், அதுகுறித்த புகார்களை தெரிவிக்க, கண்காணிப்புக் குழுவை ஏற்படுத்த வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தனியார் பள்ளிகள்

சென்னையைச் சேர்ந்த, மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர், பாடம் நாராயணன் தாக்கல் செய்த மனுவில், கல்வி பெறும் உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில், ஏழை, எளிய விளிம்பு நிலை மாணவர்களுக்கு, 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

இதை அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை ஏற்கனவே விசாரித்த, முதல் பெஞ்ச் வெவ்வேறு கல்வி நிறுவனங்களில், 25 சதவீத ஒதுக்கீட்டுக்கான இடங்களின் எண்ணிக்கையை, மூன்று நாட்களில் இணையதளத்தில், கல்வித்துறை வெளியிட வேண்டும்&' என, உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சிவஞானம் அடங்கிய, முதல் பெஞ்ச் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை:

மொத்தம் உள்ள, 32 மாவட்டங்களில், துவக்க நிலையான, எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்புக்கு, பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை, 4.57 லட்சம். அதில், 25 சதவீத ஒதுக்கீட்டுக்கான இடங்களின் எண்ணிக்கை, 1.17 லட்சம்.

இந்த ஒதுக்கீட்டின் கீழ், சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை, 65 ஆயிரத்து, 838. பள்ளிகள் வாரியாக, 25 சதவீத ஒதுக்கீட்டின்படி, எத்தனை காலியிடங்கள் உள்ளன என்ற விவரங்களும், இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஏழை எளிய மாணவர்களின் நலனுக்காக, நவம்பர் வரை, காலியிடங்களை அப்படியே வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நோட்டீஸ்

பல முறை உத்தரவிட்டும், 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர்களைச் சேர்க்காத பள்ளிகளிடம், விளக்கம் கோரி, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் பெற்ற பின், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து,  முதல் பெஞ்ச்  பிறப்பித்த உத்தரவு: 

தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதில், நாங்கள் திருப்தியடைகிறோம். 25 சதவீத இடங்களில் மாணவர்களை சேர்க்க மறுத்தால், அந்த ஒதுக்கீட்டில் சேர்வதற்கு பணம் கேட்டால், அதிகாரிகளின் கவனத்துக்கு, கொண்டு வரலாம்.

இந்த நடவடிக்கைகளுக்காக, கண்காணிப்புக் குழுவை, பள்ளி கல்வித்துறை ஏற்படுத்த வேண்டும். அதில் இடம் பெறுபவர்களின் பெயர்களை, இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

ஒரு வாரத்தில், கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும். அக்., 9ம் தேதிக்கு, விசாரணை தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.