முதுநிலை பொறியியல் படிப்பு சேர்க்கைக்கு இணையவழியில் பதிவு செய்வதற்கும், விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து சமர்பிப்பதற்கும் திங்கள்கிழமை (ஜூலை 6) கடைசி நாளாகும். பல்கலைக்கழகத் துறைகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் உள்ள முதுநிலை பொறியியல் படிப்புகளான எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான். படிப்புகளில் உள்ள இடங்கள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் சார்பில் ஒப்படைக்கப்படும் முதுநிலை பட்டப் படிப்பு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.
இளநிலை பொறியியல் படிப்புகளில் தேர்ச்சி பெற்று, தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட் 2015) அல்லது பொறியியல் பட்டதாரி நுண்ணறிவுத் தேர்வில் (கேட் 2015) தகுதி பெற்றிருப்பவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
இதற்கு விண்ணப்பதாரர்கள் முதலில் இணையவழியில் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்ய ஜூலை 3 கடைசித் தேதி எனவும், இணையவழியில் நிறைவு செய்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து சமர்ப்பிக்க ஜூலை 4 கடைசித் தேதி எனவும் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததாலும், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்றும் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை பல்கலைக்கழகம் நீட்டித்தது. அதன்படி, முதுநிலை பொறியியல் படிப்பு சேர்க்கைக்கு இணையவழியில் பதிவு செய்யவும், பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கவும் திங்கள்கிழமையோடு கால அவகாசம் நிறைவடைகிறது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.