Pages

Thursday, July 16, 2015

மென்ஸஸ்- ஆண்களுக்கான பெண்களின் திரைப்படம்!


மாதவிடாயும் ரத்தம் தான், தாய்பாலும் ரத்தம் தான். இது பலருக்கு தெரிந்திருந்தும் தாய்ப்பாலை புனிதமாக கருதுவதும் மாதவிடாயை கூறக்கூடாத அவச்சொல் போல கருதுவதும் நீண்ட காலமாக தொடர்கிறது. அது, சமீபத்தில் தான் மெல்ல மெல்ல மாறி வருகிறது. அப்படி இருந்தும் இன்றும் பலர் இந்த மன மாற்றத்திற்கு தயாராகவில்லை என்று சொன்னால் அது மிகையாகாது.


ஜூன் 20 அன்று மேற்கு அண்ணா நகரில் SBIOA பள்ளியில் நடந்த கலை மற்றும் கலாச்சார விழாவில் மாதவிடாய் (மென்ஸஸ்) என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. அந்த திரைப்படம் இந்த உண்மையை முகத்தில் அறைந்தாற்போல் உணர்த்தியது.



கீதா இளங்கோவன் இயக்கிய இந்த ஆவணப்படத்தில் மாதவிடாய் என்றால் உயிர்தரிக்கும் முறை என்று தொடங்கி கலாச்சாரம், சுகாதாரம், ஆண் ஆதிக்கம் போன்றவற்றால் எப்படி பெண்கள் மாதவிடாயின்போது அவதிப்படுகிறார்கள் என்று ஆணி அடித்தது போல பதிவு செய்திருக்கிறார். ஒரு உயிர் பிறந்தால் கொண்டாடும் மக்கள், அதற்கான ஏற்பாடான மாதவிடாயினை குற்றம் போல கருதி வீட்டிலிருந்து பெண்களை விலக்கி வைப்பதும் ஒருவகையில் தீண்டாமை குற்றம் தான்.

இந்த திரைப்படத்தில் மதுரை, தேனி போன்ற மாவட்டங்களுக்கு அருகில் இருக்கும் சிறு கிராமங்களில் இன்றும் முட்டுவீடு என்ற அநுஷ்டானம் நிலவுவதினை சுட்டிக்காட்டுகிறார். சாமி பயம், மூட நம்பிக்கை ஆகியவையால் ஜாதி, மத வேறுபாடு இன்றி பலராலும் அந்த கிராமங்களில் இது பின்பற்றி வரப்படுகின்றது. மாதவிடாய் வந்ததும் பெண், தான் இருக்கும் வீட்டினை விட்டு சற்று தொலைவில் உள்ள இருட்டு அறையில் தனது மதவிடாய் முடியும் வரை சாக்குப் பையில் அமர்ந்து, அத்தனை நாட்களையும் தனியாக கழிக்க வேண்டும். அவள் பயன்படுத்திய பொருட்கள், துணிகள் என்று அனைத்தும் தீண்டத் தகாததாக பாவிப்பார்கள். உணவு, நீர் அனைத்தும் யாராவது கொண்டு வந்து வாசலில் வைப்பர். ஒருவேளை அவர் எடுத்து வரவில்லை என்றால் பட்டினி தான். 

பல துறைகளைச் சேர்ந்த பெண்கள் அவர்களது கருத்தினை இத்திரைப்படம் மூலமாக,'' நமது நாட்டில் போதிய மருத்துவ அறிவு மக்களுக்கு இல்லை. பள்ளிகளில்கூட ஆசிரியர்கள் மாதவிடாய் குறித்த பாடத்தினை நடத்த சங்கடப்பட்டு கொண்டு மாணவர்களையே படிக்க சொல்கின்றனர். ஆசிரியர்களே சங்கடப்பட்டால், பின்னர் எப்படி அடுத்த தலைமுறையினர் இந்த அறியாமை விலங்கினை உடைப்பர்? இது போன்ற சமயங்களில் ஒரு பெண்ணின் ஆடைகளில் ரத்தம் கசிந்தால், அதனை கொலை குற்றம் போல பாவிப்பது எப்படி குறையும்?" என்று கூறியது மிகவும் நியாயமாகத்தான் தோன்றியது.

மேலும், உடல் ஊனமுற்றோர் பொது கழிப்பிடத்தில் படும் அவஸ்தைகளை கோப்புக்காட்சிகளாக தொகுத்தது பார்ப்போரின் மனதை கலங்க வைத்தது. குழந்தைகள் வீட்டில் தவழ்ந்து சென்றால் தரை சுத்தமாக  இருக்க வேண்டும் என்று பலரும் நினைப்பர். ஊனமுற்ற பெண் அதுவும் மாதவிடாயின்போது பொது கழிப்பிடத்தில் தனது கைகளை ஊன்றி நகர்ந்து சென்ற காட்சி, பொதுக்கழிப்பிட பராமரிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தியது.



''கேர்ள்ஸ் ஃப்ரெண்ட்லி ரெஸ்ட் ரூம் நமது நாட்டில் மிகவும் குறைவு. சானிடரி நாப்கின் வினியோகம் செய்யும் இயந்திரம், பயன்படுத்திய நாப்கினை எரிக்கும் நாப்கின் டிஸ்போசல் இயந்திரம், குப்பை தொட்டி, நீர் வசதி, சுத்தமான சூழல் ஆகியவை கேர்ள்ஸ் ஃப்ரெண்ட்லி ரெஸ்ட் ரூமின் அடிப்படை தேவைகள். அப்படிப்பட்ட வசதி சட்டமன்றத்திலும் இல்லை" என்று ஆவணப்படம் மூலமாக சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தெரிவித்தார்.

பல மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட இந்த பிரத்யேக திரையிடுதலில், கீதா இளங்கோவன் அவர்களோடு கலந்துரையாடினார். “மென்சஸ் என்றதும், இது ஏதோ பெண்களுக்கான படம் என்று நினைத்தேன். ஆனால், இது பெண்கள் சம்பந்தப்பட்ட ஆண்களுக்கான விழிப்புணர்வு படமாக அமைந்ததை எதிர்பார்க்கவில்லை" என்று ஒரு மாணவர் கூறினார்.

''2012 ஆம் ஆண்டு முதல் இன்று வரை சுமார் 100 முறைக்கும் மேல் பல பொது இடங்களில் திரையிடப்பட்ட படம் என்றாலும், ஒவ்வொரு முறையும் பலருக்கு இந்த விஷயம் இந்த படம் மூலமாக தான் முதன்முதலில் தெரிகின்றது . பொது கழிப்பிடத்தை பெண்கள் பயன்படுத்த சங்கடப்பட்டு காலை முதல் மாலை வரை பள்ளி மாணவிகள், அலுவலகத்தில் பணிபுரிவோர்கள் தமது நாப்கினை மாற்றாமல், வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல், அப்படியே வைத்திருந்தால் தொற்று வரலாம். மாதவிடாயின்போது சிறுநீர் கூட அடக்கி வைத்து அவர்களது வீட்டில் தான் கழிப்பறையை பயன்படுத்த வேண்டும் என்று வைராக்கியமாக இருந்து, தம் சிறுநீர்ப்பை செயல் திறனை குறைத்துக் கொள்கிறார்கள்" என்று கீதா எச்சரித்தார்.

1 comment:

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.