Pages

Friday, July 17, 2015

பி.எட். கலந்தாய்வு: மீண்டும் லேடி விலிங்டன் கல்லூரியே நடத்துகிறது

ஆசிரியர் கல்வியியல் கல்வி (பி.எட்.) மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மீண்டும் சென்னை லேடி விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனமே நிகழாண்டில் நடத்த உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.அரசு கல்வியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் பி.எட். இடங்கள், சுயநிதி கல்வியியல் கல்லூரிகள் சார்பில் ஒப்படைக்கப்படும் இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை, பல ஆண்டுகளாக சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள லேடி விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்தி வந்தது.


கடந்த 2014-15 கல்வியாண்டில் இந்தக் கலந்தாய்வு நடத்தும் பொறுப்பு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. முதன்முறையாக கலந்தாய்வை நடத்திய பல்கலைக்கழகம், புதிய நடைமுறைகளை அறிமுகம் செய்தது.அதாவது, சென்னையில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த பி.எட். கலந்தாய்வை, இணையவழி மூலம் சென்னை, கோவை, சேலம், மதுரை ஆகிய நான்கு இடங்களில் நடத்தியது. அது மாணவர்களிடையேயும், பெற்றோரிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றபோதும், பி.எட். சேர்க்கை தொடர்பாக பல்வேறு புகார்கள் கூறப்பட்டன.

இந்த நிலையில், நிகழாண்டில் (2015-16) பி.எட். கலந்தாய்வு நடத்தும் பொறுப்பு மீண்டும் லேடி விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.இதுகுறித்து பல்கலைக்கழக உயரதிகாரி ஒருவர் கூறியது:

பி.எட். சேர்க்கை தொடர்பான அரசு உத்தரவு கடந்த வாரம் வழங்கப்பட்டது. அதில் கலந்தாய்வு ஒருங்கிணைப்பு அதிகாரியாக (நோடல்) விலிங்டன் சீமாட்டி கல்லூரி முதல்வர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.எனவே, நிகழாண்டில் கலந்தாய்வை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நடத்த முடியாது. அந்தக் கல்லூரிதான் நடத்தும் என்றார். 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.