Pages

Friday, July 31, 2015

தமிழகத்தில் 7,243 நர்ஸ் தேர்வு;தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த, தமிழகத்தில், 7,243 நர்ஸ் தேர்வு அறிவிப்புக்கு, தடை விதிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. அரசு பயிற்சி பெற்ற மற்றும் பயிற்சி செவிலியர் சங்கத்தின் தலைவர், பூமி, தாக்கல் செய்த மனு:


தேர்வு வாரியம் அறிவிப்பு கடந்த ஏப்ரலில், ஒப்பந்த அடிப்படையில், தொகுப்பூதியத்தில், 7,243 நர்ஸ் பணியிடங்களுக்கு, விண்ணப்பங்களை வரவேற்று, மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம், அறிவிப்பு வெளியிட்டது.

மொத்தம், 7,243 இடங்களில், முதல், 451 இடங்களில், ஆண், பெண் நர்ஸ்கள்; மீதி உள்ள, 6,792 பணியிடங்களில், பெண் நர்சுகள் மட்டுமே நியமிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 

இது,பாரபட்சத்தை காட்டுகிறது.ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுப்பது, சட்டவிரோதமானது. மேலும், 58 வயது வரை விண்ணப்பிக்கலாம் என்பதும், விதிகளுக்கு முரணானது. எனவே, இந்த அறிவிப்பை, ரத்து செய்ய வேண்டும். அதுவரை, தடை விதிக்க வேண்டும்.


இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது. தடை கோரி, பயிற்சி பெற்ற நர்சுகள், மற்றொரு மனுவைத் தாக்கல் செய்தனர். மனுக்களை, நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்தார். அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சோமயாஜி ஆஜரானார். 

இடைக்கால மனுக்களை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:


மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்த, இந்த தேர்வு நடக்கிறது. இது, ஒப்பந்த முறையிலான நியமனம் அல்ல. திட்டங்கள் தொடரும் வரை, நர்ஸ் பணியும் தொடரும். அரசு மருத்துவமனைகளில் காலியிடங்கள் ஏற்படும்போது, அதில், இவர்கள் நியமிக்கப்படுவர்.

வயது வரம்பு அட்வகேட் ஜெனரல், தனியார் கல்லுாரிகளில் படித்த, பயிற்சி பெற்ற நர்சுகள், கடந்த, 25 ஆண்டுகளாக, பணிக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை; வயது வரம்பு தளர்த்தியது, இந்த தேர்வுக்கு மட்டும் தான். வரும் காலங்களில், 32 வயது என்பதை கண்டிப்புடன் பின்பற்றுவோம், என்றார். இந்த வாதத்தில், நான் உடன்படுகிறேன்.


அரசு தரப்பில் தாக்கல் செய்த புள்ளிவிவரங்களை பார்க்கும்போது, 32 வயதை கடந்தவர்களின் எண்ணிக்கை குறைவானது தான். அவர்களை தேர்வு எழுத அனுமதிப்பதால், 32 வயதுக்கு குறைவானவர்களுக்கு, கடுமையான பாதிப்பு ஏற்படாது.

பெண்களுக்கு என, 6,792 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தம், 40 ஆயிரம் பேர் வரை, விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், ஆண்கள், 1,790 பேர் தான். பெண்கள் சம்பந்தப்பட்ட நோய் சிகிச்சைக்காக, பெண் நர்சுகளை நியமிப்பதில், குறை காணமுடியாது. மேலும், மத்திய அரசு, இந்த திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்கிறது. 

எனவே, பெண்களுக்கான ஒதுக்கீட்டில் குறுக்கிட, எந்த காரணமும் இல்லை. மனுதாரர்கள் கோரியபடி, இடைக்கால தடைவிதிக்க முடியாது. மனுக்கள், தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.