Pages

Monday, June 15, 2015

தனியார் பள்ளி கல்விக் கட்டண புகார்:விசாரிக்க சி.இ.ஓ.,க்களுக்கு அதிகாரம்

தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணப் புகார்கள் குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளான - சி.இ.ஓ.,க்கள் விசாரிக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லுாரிகளில், புதிய கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. பல்வேறு தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணய கட்டணத்தை விட, கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதாக, புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.


குறிப்பாக, மெட்ரிக் பள்ளிகள் தவிர, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இந்தக் கட்டண விதிமீறல் அதிக அளவில் உள்ளதாகவும், பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.சென்னை, அடையாறில் உள்ள பாலவித்யா மந்திர் பள்ளியில், இரண்டு வித கட்டணம் வசூலிப்பதாகவும், மாணவர்களை பாகுபாடாக நடத்துவதாகவும், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் கடந்த வாரம் தொடர் போராட்டம் நடத்தினர்.

பெற்றோர் அளித்த புகாரால், தனியார் பள்ளி கல்விக் கட்டண நிர்ணயக் கமிட்டி தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலு உத்தரவுப்படி, கல்வித்துறை இணை இயக்குனர் கார்மேகம், சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர், சம்பந்தப்பட்ட பள்ளியில் நேரடியாக எட்டு மணி நேர விசாரணை நடத்தினார். சிங்காரவேலு கமிட்டியும் வரும், 18ம் தேதி விசாரணை நடத்துகிறது.

இதற்கிடையில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிக்கு எதிராக, பெற்றோர் மற்றும் மாணவர்கள் கடந்த வாரம் தொடர் போராட்டம் நடத்தினர். பெற்றோர் சார்பில், நீதிபதி சிங்காரவேலு கமிட்டியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இதேபோல், பல்வேறு பள்ளிகளிலும் கட்டணப் புகார்கள் எழுவதால், பொதுவான உத்தரவு ஒன்றை நீதிபதி சிங்காரவேலு கமிட்டி பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில், அனைத்து மாவட்டங்களிலும் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் தொடர்பான புகார்களை, சி.இ.ஓ.,க்கள் விசாரிக்கலாம் என, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் பள்ளி மீதான புகார் குறித்து விசாரிக்க, சென்னை, சி.இ.ஓ., அனிதா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.