Pages

Monday, June 8, 2015

பள்ளிகளில் அனுமதியின்றி கூடுதல் வகுப்புகள்; ஆய்வு நடத்த இயக்குனரகம் உத்தரவு

தனியார் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, அனுமதிக்கு அதிகமாக கூடுதல் வகுப்புகளை துவங்கி உள்ளதாக புகார்கள் வந்துள்ளதால், திடீர் ஆய்வு நடத்த, மெட்ரிக்இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது. புதிய கல்வியாண்டை ஒட்டி, அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
இதில், சில தனியார் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, அனுமதியை மீறி, கூடுதல் எண்ணிக்கையில் மாணவர்களை சேர்த்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

சமீபத்திய, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், ஏராளமான பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர், மாநிலத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.இந்த மாநில, 'ரேங்க்'கை பயன்படுத்தி, குறிப்பிட்ட சில பள்ளிகள், வணிக மயமாக, அனுமதித்த அளவை மீறி மாணவர்களை சேர்க்கின்றன. ஆனால், அதற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்தவில்லை.
பத்தாம் வகுப்பில் மாநில ரேங்க் பெற்ற சில பள்ளிகள், ஒன்பது மற்றும் 10ம் வகுப்புகளிலும், பிளஸ் 2வில் மாநில, ரேங்க் பெற்ற சில பள்ளிகள், பிளஸ் 1 லும், அதிக பிரிவு வகுப்புகளை துவங்கி, நுாற்றுக்கணக்கில் மாணவர்களை சேர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத் தலைவர் சாமி சத்தியமூர்த்தி கூறுகையில், ''தனியார் பள்ளிகளில், வணிக மயமாக மாணவர்களை சேர்க்கின்றனர். அங்கீகாரத்துக்கு மனு செய்த போது, காட்டிய பிரிவுகள், மாணவர்களை விட, பலமடங்கு அதிக வகுப்புகளை தனியார் பள்ளிகள் துவங்கி உள்ளன. இதுகுறித்து, கல்வித் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

இதுகுறித்து, மெட்ரிக் இயக்குனரக அதிகாரிகள் கூறுகையில், 'இந்த பிரச்னை தொடர்பாக, மாவட்ட மெட்ரிக் ஆய்வாளர்கள் மூலமும், மாநில அளவிலான அதிகாரிகள் மூலமும், பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்த உள்ளோம். விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால், பள்ளிகளுக்கான அங்கீகாரம் மறுபரிசீலனை செய்யப்படும்' என்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.