பள்ளிக் கல்வித் துறையில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பணியிடமாறுதல் கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பள்ளிக் கல்வித் துறையில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 650-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்களும், 60-க்கும் மேற்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிடங்களும் இப்போது காலியாக உள்ளன.
அதேபோல, பணி ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் 1,600-க்கும் மேல் காலியாக உள்ளன. வழக்கமாக, மேல்நிலை, உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணியிடமாறுதல் கலந்தாய்வு ஆகியவை ஜூன் மாதத்தில் நடைபெறும்.
இந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறை இதுதொடர்பான அறிவிப்பு எதையும் இதுவரை வெளியிடவில்லை. இதையடுத்து, கற்றல், கற்பித்தல் பணிகள் சிறப்பாக நடைபெற தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணியிடமாறுதல் கலந்தாய்வை ஜூலை முதல் வாரத்தில் நடத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் சங்கம் கோரியுள்ளது. எந்தவிதப் புகார்களுக்கும் இடமளிக்காமல் இந்தக் கலந்தாய்வை நேர்மையாக நடத்த வேண்டும் என்று அந்தச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்தார்.
இந்தக் கலந்தாய்வுக்கு முன்னதாகவே 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் கோரினார்.
முதல்கட்டமாக, மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வும், அதைத் தொடர்ந்து முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக, பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் தமிழக அரசுக்குப் பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிந்ததும் இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களைப் பொருத்தவரை பல பள்ளிகளில் அதிக ஆசிரியர்கள் உள்ளதால் பணி நிரவலுக்குப் பிறகு கடைசியாக இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.