Pages

Monday, June 1, 2015

அட்மிஷன் பெற அரசு பள்ளிகளிலும் கட்டணம் வசூலிப்பு; அதிருப்தியில் பெற்றோர்

திருப்பூரில் உள்ள மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கு, 2,000 முதல் 3,500 ரூபாய் வரை கல்வி கட்டணம் வசூலிப்பதால், பெற்றோர் அதிருப்தி அடைகின்றனர்.


கோடை விடுமுறைக்கு பின், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், நாளை திறக்கப்படுகின்றன. திருப்பூரில் உள்ள அரசு பள்ளிகளில், ஆறாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி, பழனியம்மாள் மாநகராட்சி பள்ளி, நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி மற்றும் அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு ஆங்கில வழி மாணவர் சேர்க்கைக்கு, 1,000 முதல் 2,000 ரூபாய் வரை; பிளஸ் 1 சேர்க்கையில், 2,000 முதல், 3,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பனியன் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தினர் மத்தியில், இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இலவச பாடப்புத்தகம், நோட்டு புத்தகம், சீருடை என, 16 வகையான நலத்திட்டங்களை, அரசு செயல்படுத்துகிறது. ஆனால், கல்வி கட்டணமாக, 3,500 ரூபாய் வரை செலுத்துவது, பெற்றோருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, பள்ளியில் சுயநிதி பாடப்பிரிவு செயல்படுத்தப்படுகிறது. இதில் சேர மாணவ, மாணவியர் ஆர்வம் காட்டுகின்றனர். இப்பிரிவுகளில், பாடம் நடத்த போதிய ஆசிரியர்கள் இல்லை. பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் ஆசிரியர் நியமிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு மாத சம்பளம், அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு ரெக்கார்டு நோட்டு, வினாத்தாள், விடைத்தாள் வாங்குவதற்கான செலவு, பள்ளி பராமரிப்பு, நிர்வாக செலவு என பல நெருக்கடிகள் உள்ளன.

வசதியற்ற பெற்றோரை, இக்கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்துவதில்லை; அவர்களால் முடிந்த கட்டணம் செலுத்தினால் போதும். அதிக மதிப்பெண் பெற்ற குழந்தைகளையும், கட்டணம் செலுத்த வற்புறுத்துவதில்லை. சுயநிதி பாடப்பிரிவு துவங்க அனுமதிக்கும் கல்வித்துறை, அதற்கான செலவினத்தை பள்ளி நிர்வாகமே ஏற்க அறிவுறுத்துகிறது. அதனால், கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க முடிவதில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

உண்மையான கட்டணம் இவ்ளோதான்!

பள்ளி கல்வித்துறை உத்தரவுபடி, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, 200 ரூபாய், ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்புகளுக்கு, 250 ரூபாய், பிளஸ் 1ல் சேர, 500 ரூபாய், பிளஸ் 1ல் கம்ப்யூட்டர் பிரிவில் சேர, 700 ரூபாய் என கட்டணம் வசூலிக்க வேண்டும். இதுதவிர, பெற்றோர் ஆசிரியர் சங்க கட்டணம், 50 ரூபாய், வினாத்தாள் - விடைத்தாள் ஆகியவற்றுக்காக ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்புக்கு, 100; எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்புகளுக்கு, 150; பத்தாம் வகுப்புக்கு, 250 ரூபாய்; பிளஸ் 1 வகுப்புக்கு, 300 ரூபாய் என, தேர்வுகளின் எண்ணிக்கை அடிப்படையில், கட்டணம் வசூலிக்கப்படும். கொடிநாள் கட்டணமாக ஆண்டுக்கு ஆறு ரூபாய் வீதம் பெற வேண்டும், என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.