Pages

Tuesday, June 23, 2015

அண்ணா பல்கலை படிப்புக்கு சிக்கல்; யு.ஜி.சி., அனுமதி கிடைக்காததால் குழப்பம்

பல்கலை மானியக் குழுவான - யு.ஜி.சி.,யின் அங்கீகாரம் கிடைக்காததால், அண்ணா பல்கலையின் தொலைதுாரக் கல்வியில், ஆன்லைன் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில், மாணவர்களை சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


முதுகலைப் படிப்பு

அண்ணா பல்கலையின் தொலைதுாரக் கல்வி இயக்ககம் மூலம், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ.,- எம்.எஸ்சி., போன்ற முதுகலைப் படிப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், எம்.எஸ்.சி.,யில், கம்ப்யூட்டர் சயின்ஸ் - ப்ரீ அண்டு ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர் என்ற படிப்பு, ஆன்லைனில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் வேறு எந்த முன்னணி பல்கலையும் நடத்தாத வகையில், அண்ணா பல்கலை மட்டுமே, ஆன்லைன் தொழில்நுட்பப் படிப்பை நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இரண்டு ஆண்டில், நான்கு, செமஸ்டர் கொண்ட இந்த படிப்பில் சேர, பிளஸ் 2 முடித்து, கணிதம் அல்லது புள்ளியியல் பாடப்பிரிவில், பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும்.

இந்த படிப்பில் சேர கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால், இந்தப் படிப்பை நடத்துவதில், அண்ணா பல்கலைக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த படிப்புக்கு யு.ஜி.சி.,யிடமிருந்து இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, யு.ஜி.சி., வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:

எந்த ஓர் அரசு மற்றும் தனியார் பல்கலையும், தங்கள் மாநிலத்தை விட்டு வெளியே படிப்பு மையம் அமைக்க முடியாது. அதற்கு, யு.ஜி.சி.,யின் அனுமதி பெற வேண்டும். இதேபோல், தனியார் நிகர்நிலை பல்கலை கழகங்கள் தங்கள் வளாகத்துக்கு வெளியே படிப்பு மையம் அமைக்கவும், அனுமதி பெற வேண்டும். மேலும், இந்தியாவில் எந்த ஒரு அரசு மற்றும் தனியார் பல்கலைக்கும், ஆன்லைன் மூலம் முழுநேரப் படிப்பு நடத்த அனுமதி வழங்கவில்லை. அதுபோன்ற அறிவிப்புகளை நம்ப வேண்டாம். இவ்வாறு யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.

ஆன்லைன் படிப்பில்...

இந்த அறிவிப்பால், அண்ணா பல்கலையின், ஆன்லைன் படிப்பில் மாணவர் சேர்க்கை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து, அண்ணா பல்கலை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ஆன்லைன் படிப்புக்கு யு.ஜி.சி.,யின் தொலைதுாரக் கல்வி அமைப்பில் விண்ணப்பித்துள்ளோம். யு.ஜி.சி.,யின் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.