Pages

Wednesday, June 10, 2015

சட்டப் படிப்பில் சேர வயதுவரம்பு தளர்வு; தாத்தாவும் சட்டம் படிக்க வாய்ப்பு!

இனி, 90 வயது தாத்தா கூட சட்டப்படிப்பு படிக்கும் வகையில், வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. ஆனால், படிப்பு முடித்த பின், நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்றால், வழக்கறிஞர் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.


வினியோகம்: தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலையில், வரும் கல்வியாண்டுக்கான, மூன்றாண்டு மற்றும் ஐந்தாண்டு படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், கடந்த, 5ம் தேதி துவங்கியது. முதுநிலை டிப்ளமோ படிப்புக்கு, நேற்று முதல், விண்ணப்ப வினியோகம் துவங்கியது.

மாற்றம்: இந்த ஆண்டு, சட்டப் படிப்பில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பி.எல்., மற்றும் எம்.எல்., பட்டங்கள், மத்திய பல்கலை மானியக்குழு அறிவுறுத்தல்படி, எல்.எல்.பி., மற்றும் எல்.எல்.எம்., என மாற்றப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அகில இந்திய பார் கவுன்சில் மேற்கொண்ட முடிவின்படி, அனைத்து சட்டப் பல்கலையிலும் வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலையிலும் வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளதை, பல்கலை துணைவேந்தர் வணங்காமுடி, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதன்படி, அம்பேத்கர் பல்கலையின் ஐந்தாண்டு, ’ஹானர்ஸ்’ பட்டப் படிப்புகளுக்கு, பட்டியலினத்தவர் (தாழ்த்தப்பட்டோர்) மற்றும் பழங்குடியினப் பிரிவினர் விண்ணப்பிக்க, உச்ச வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்பில் மற்ற பிரிவினருக்கு, 21 வயது உச்ச வரம்பாகும்.

இதேபோல், எல்.எல்.பி., மூன்றாண்டு சட்டப்படிப்புக்கு, அனைத்து பிரிவினருக்கும் வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளது. கடந்த, 2008 வரை, வயது வரம்பு இல்லாத நிலையே இருந்தது. பின், அகில இந்திய பார் கவுன்சில், வயது வரம்பு நிர்ணயம் கொண்டு வந்தது. இதனால், கடந்த கல்வியாண்டு வரை, எல்.எல்.எம்., ’ஹானர்ஸ்’ படிப்புக்கு, பொதுப் பிரிவினருக்கு, 20 வயது; பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு, 22 வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதேபோல், மூன்று ஆண்டு எல்.எல்.எம்., படிப்புக்கு, பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு, 35 வயது; மற்ற பிரிவினருக்கு, 30 வயது வரம்பு இருந்தது. தற்போது இதில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், பல்கலை நிர்ணயித்துள்ள கல்வித் தகுதி நிறைந்த, 90 வயது தாத்தா கூட, சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

அதிக மதிப்பெண்: ஆனால், அவர் இந்த காலத்து மாணவர்களைப் போன்று, அதிக மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். படிப்பு முடித்தாலும், பார் கவுன்சில் நடத்தும் வழக்கறிஞர் தகுதித் தேர்வை முடித்தால் தான், பார் கவுன்சிலில் பதிவு செய்த வழக்கறிஞராக, நீதிமன்றத்தில் வாதாட முடியும் என, சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.