Pages

Thursday, June 11, 2015

‘பள்ளிகளில் திறந்த வெளி கிணறுகளை சரி செய்ய வேண்டும்’ தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

பள்ளியில் திறந்த வெளி கிணறுகள் ஆபத்தான வகையில் இருந்தால் அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்குனர் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து தமிழக தொடக்கக் கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


பள்ளிகள் ஆய்வு
ஊராட்சி ஒன்றியம், அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆண்டு ஆய்வு, பள்ளிகள் பார்வை ஆகியவற்றை மேற்கொண்டு வருகின்றனர்.


அதன்படி ஜூன் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை மாதம் தோறும் 5 பள்ளிகளில் ஆண்டு ஆய்வும், 18 பள்ளிகள் பார்வையிட வேண்டும். இதில் செப்டம்பர், டிசம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மட்டும் 2 பள்ளிகளில் ஆண்டு ஆய்வும், 12 பள்ளிகள் பார்வையிட வேண்டும்.

ஆசிரியர்கள் பாராட்டு
2 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டு ஆய்வு செய்யப்படாத பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதுடன், ஆண்டு ஆய்வு தினத்தன்று நாள் முழுவதும் பள்ளியில் இருந்து துல்லியமாக ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க வேண்டும்.

சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களை பாராட்டுவதுடன், நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளியின் கட்டமைப்பு, கணினி, தொலைக்காட்சி, கழிப்பறை, குடிநீர் மற்றும் நூலகப் பயன்பாடுகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.

உதவி பெறும் பள்ளிகள்
பள்ளியில் திறந்த வெளிக் கிணறுகள், உயர் அழுத்த மின்கம்பங்கள் ஆபத்தான வகையில் இருந்தால் அவற்றை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கான அனைத்து நலத்திட்டங்கள், கல்வி உதவித்தொகை உரிய நேரத்தில் சென்றடைகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

உதவி பெறும் பள்ளிகளையும் துல்லியமாக ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி பதிவேடுகள் பரிசீலிக்கப்படுவதுடன், குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அவற்றை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.