Pages

Friday, June 12, 2015

பாரதியார் பல்கலை. ஆராய்ச்சிக்கு யு.ஜி.சி. ரூ. 4.50 கோடி ஒதுக்கீடு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 6 துறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக, சிறப்பு ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ் பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) ரூ. 4.50 கோடி நிதி ஒதுக்கியிருப்பதாக இப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஞா.ஜேம்ஸ் பிச்சை வியாழக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் சிறப்பு ஆராய்ச்சித் திட்டங்கள் மேற்கொள்வதற்காக, யு.ஜி.சி. ரூ. 4.50 கோடி நிதி வழங்கியுள்ளது. அத்துடன் ஆய்வு மாணவர்களுக்கான நிதியுதவியும் சுமார் ரூ. 1.50 கோடி அளவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
இந்நிதியின் மூலமாக நானோ அறிவியல், இயற்பியல், வணிகவியல், கணிதம், தாவரவியல், புள்ளியியல் துறைகளில் புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.
 பல்கலைக்கழக துறைகளில் சூரிய சக்தியைப் பயன்படுத்துவது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் மூலமாக, தமிழகத்தில் மின்சார உற்பத்தி பெருகுவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் ஒரே நேரத்தில் 6 துறைகளுக்கும் சிறப்பு ஆராய்ச்சித் திட்டங்கள் வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. ஒரு பல்கலைக்கழகத்தில் உள்ள மொத்த துறைகளில் மூன்றில் ஒரு பங்கு துறைகள் 
 யு.ஜி.சி. அங்கீகாரம் பெற்றிருப்பதும், ஒரே நேரத்தில் ஆறு துறைகளுக்கும் சிறப்பு ஆராய்ச்சித் திட்டங்கள் வழங்கப்பட்டிருப்பதும் இதுவே முதல் முறையாகும். 
 பல்கலைக்கழக ஆராய்ச்சிகளின் உயர்வை மதிப்பிட்டு மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறை ரூ. 9 கோடி ஆராய்ச்சி நிதியாக வழங்கியுள்ளது. இந்த நிதியின் மூலம் உலகத்தரம் வாய்ந்த ஆய்வுக் கருவிகள் வாங்கப்பட்டு, அதன் மூலமாக புதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. நுழைவுத் தேர்வின் அடிப்படையில் ஆராய்ச்சி மாணவர்களின் சேர்க்கை நடைபெற்று வருவதால் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியின் தரம் உயர்கிறது. கலை, அறிவியல் கல்லூரிகளில் தொழில் கல்வியை அறிமுகப்படுத்தும் தீனதயாள் குஷால் கேந்திரா திட்டத்தை ரூ. 5 கோடி செலவில் நடைமுறைப்படுத்தும் ஆய்வுத் திட்டம் ஒன்றும் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார் துணை வேந்தர் ஞா.ஜேம்ஸ் பிச்சை. 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.