Pages

Wednesday, June 24, 2015

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்டு 31-ந்தேதிவரை கால அவகாசம்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக, 14 பக்க படிவம், இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அதில், வரி செலுத்துவோர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணம், செயல்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகள் போன்ற கூடுதல் தகவல்கள் கேட்கப்பட்டிருந்தது.

இதனால், கணக்கு தாக்கல் செய்வது பெரும் தொந்தரவாகி விடும் என்று தனிநபர்கள், தொழில் அதிபர்கள், எம்.பி.க்கள் என அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அந்த படிவத்தை நிறுத்தி வைக்க மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி உத்தரவிட்டார்.
இந்நிலையில், 2015-2016-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கலுக்காக, எளிமைப்படுத்தப்பட்ட புதிய படிவங்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. அத்துடன், கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம், ஆகஸ்டு 31-ந்தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐடிஆர்-2ஏ எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட படிவம், வர்த்தகம், தொழில் மூலம் வருமானம் இல்லாத, வெளிநாட்டில் சொத்து இல்லாத தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டு குடும்பத்தினர் தாக்கல் செய்யக்கூடியது ஆகும்.

அதில், வரி செலுத்துவோரிடம் பாஸ்போர்ட் இருந்தால், அதன் எண் மட்டும் கேட்கப்பட்டுள்ளது. அத்துடன், முந்தைய ஆண்டின் எந்த காலகட்டத்திலும் அவர் வைத்திருந்த சேமிப்பு மற்றும் நடப்பு வங்கிக்கணக்குகளின் மொத்த எண்ணிக்கையையும் தெரிவிக்க வேண்டும். செயல்பாட்டில் இல்லாத வங்கிக்கணக்கு விவரத்தை தெரிவிக்க வேண்டியது இல்லை.

வங்கிக்கிளையின் ஐ.எப்.எஸ்.சி. கோட் நிரப்ப இடம் விடப்பட்டுள்ளது. ‘ரீபண்ட்’ எனப்படும் திரும்பப் பெறும் தொகையை எந்த வங்கிக்கணக்கில் பெற்றுக்கொள்வது என்பதையும் வரி செலுத்துவோர் குறிப்பிட வேண்டும். ‘ஆதார்’ எண் மற்றும் இ-மெயில் முகவரியும் கேட்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் கணக்கு தாக்கல் செய்வதை உறுதி செய்வதற்காக, அவை கேட்கப்பட்டுள்ளன.

வர்த்தகம் மற்றும் தொழில் மூலம் வருமானம் பெறும் தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டு குடும்பத்தினருக்காக ஐடிஆர்-2 என்ற படிவம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், வெளிநாட்டில் சொத்து இருந்தாலோ அல்லது வெளிநாட்டில் இருந்து வருமானம் வந்தாலோ அதுபற்றி குறிப்பிட வேண்டும்.

ஆனால், இந்திய குடிமகனாக இல்லாமல், தொழில், வேலை மற்றும் படிப்பு நிமித்தமாக இந்தியாவில் தங்கி இருப்பவர்கள், இந்தியாவில் தங்கி இருக்காத முந்தைய ஆண்டுகளில் வெளிநாட்டில் சொத்து வாங்கி இருந்தால், அதுபற்றி தெரிவிப்பது கட்டாயம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.