சி.எம்.டி.ஏ.,வில் 176 பணியிடங்களுக்கு, 22,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். தொழில்நுட்ப கல்வி தகுதி அடிப்படையில், 10 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம் என, கூறப்படுகிறது.சி.எம்.டி.ஏ.,வில், சில ஆண்டுகளாக காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் பல்வேறு காரணங்களால் தடைபட்டு வந்தன.
திட்ட உதவியாளர் உள்ளிட்ட சில பணியிடங்களை நிரப்ப, வேலை வாய்ப்பகங்கள் வாயிலாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும், வழக்குகளால் முடங்கின. இதையடுத்து, பட்டய கணக்காளர், உதவி திட்ட அதிகாரி, திட்ட உதவியாளர், உதவி பொறியாளர் உள்ளிட்ட, 22 பதவிகள் சார்ந்த, 176 பணியிடங்களை நேரடி தேர்வு வாயிலாக நிரப்ப, சி.எம்.டி.ஏ., நிர்வாகம் முடிவெடுத்தது. அதற்கான அறிவிப்பு, மே 3ல், வெளியிடப்பட்டு, மே, 15ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
நேரடி நியமன முறையில், 176 பணியிடங்களுக்கான தேர்வில் பங்கேற்க, மே 15 வரை, 22ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஆனால், இதில், 10 ஆயிரம் மேற்பட்ட விண்ணப்பங்கள் முதல்கட்ட சரிபார்ப்பிலேயே நிராகரிக்கப்படலாம் என, கூறப்படுகிறது.
இதுகுறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத சி.எம்.டி.ஏ., உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்த விண்ணப்பங்களை பதிவு செய்து சரிபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. திட்ட உதவியாளர், உதவி திட்ட அதிகாரி போன்ற தொழில்நுட்பம் சார்ந்த பதவிகளுக்கு, கல்வித்தகுதியுடன் நகரமைப்பு வல்லுனராக பணி புரிந்த அனுபவம் இருப்பது கட்டாயமாக பார்க்கப்படுகிறது.
ஆனால், இதுகுறித்து முழுமையாக தெரியாமல் ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது. எனவே, தொழில்நுட்ப தகுதிகள் குறித்த ஆய்வில் பெரும்பாலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தடை பெற முயற்சி?
தொழில்நுட்ப கல்வித்தகுதி, வயது தகுதியில் உள்ள விதிவிலக்குகள் குறித்து அறிவிப்பில் தெளிவான விவரங்கள் அளிக்கப்படாததால், பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், அதிகாரிகளின் குளறுபடிகள் காரண மாக, விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தடை பெறவும் சிலர் திட்டமிட்டு உள்ளனர். இதனால் திட்டமிட்டபடி, பணியாளர் தேர்வு நடக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
No comments:
Post a Comment