Pages

Tuesday, June 2, 2015

அரசு புது மருத்துவ கல்லூரியில் 100 இடங்கள் தயார்

தமிழக அரசு புதிதாக துவக்கியுள்ள, ஓமந்துாரார் தோட்ட அரசு மருத்துவக் கல்லுாரியில், மாணவர் சேர்க்கைக்கு, இந்திய மருத்துவக் கவுன்சிலான எம்.சி.ஐ., பரிந்துரைத்து உள்ளது. மத்திய அரசு அனுமதி, சில நாட்களில் கிடைக்கும் என்பதால், திட்டமிட்டபடி, 100 எம்.பி.பி.எஸ்., இடங்களில் மாணவர் சேர்க்கப்பட உள்ளனர்.


சென்னை, ஓமந்துாரார் தோட்ட வளாகத்தில், கடந்த தி.மு.க., ஆட்சி யின் போது கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம், அ.தி.மு.க., ஆட்சியில், அரசு பல்நோக்கு மருத்துவமனையாகமாற்றப்பட்டது.

200 கோடி ரூபாய்:இங்கு, புதிதாக மருத்துவக் கல்லுாரியை அரசு துவக்கி உள்ளது; இதற்காக, 200 கோடி ரூபாய் செலவில், கட்டுமானப் பணி முடிந்து, கல்லுாரி தயாராக உள்ளது. இந்த கல்லுாரி செயல்பட, எம்.சி.ஐ.,யின் அனுமதி தேவை; இதற்கான பிரத்யேக குழு ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்தது.

இந்த அறிக்கை திருப்தியளிப்பதாக தெரிவித்த, எம்.சி.ஐ., '100 எம்.பி.பி.எஸ்., இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கலாம்' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைத்து உள்ளது. பரிந்துரை அளித்து, 15 நாட்களுக்கு மேலாகியும், மத்திய அரசின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. இதனால், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடக்குமா என்ற கேள்வி எழுந்தது.

எம்.சி.ஐ., பரிந்துரை:இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரி கூறியதாவது:எம்.சி.ஐ., பரிந்துரையைத் தொடர்ந்து, மத்திய அரசு அனுமதி தரும்; அதில், எந்த சிக்கலும் இல்லை; அனுமதிக்கடிதம், எந்த நேரத்திலும் கிடைக்கும். இந்த கல்லுாரி, அரசின், 20வது மருத்துவக் கல்லுாரியாக செயல்படும். திட்டமிட்டபடி, 100 எம்.பி.பி.எஸ்., இடங்களில், மாணவர் சேர்க்கப்படுவர்.
இதனால், அரசு கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., எண்ணிக்கை, 2,650 ஆக உயர்கிறது. மாநிலத்திற்கு கிடைக்கும், எம்.பி.பி.எஸ்., இடங்களின் எண்ணிக்கை, 2,172ல் இருந்து, 2,257 ஆக உயரும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.