அரசு பள்ளிகளில் ஏற்கனவே, ஸ்லோ லேர்னர் என பிரித்து, சிறப்பு வகுப்பு நடத்தப்பட்ட மாணவர்களே, அதிக அளவில் தேர்ச்சிபெற தவறியது தெரியவந்துள்ளது.
சிறப்பு வகுப்பு, ஆசிரியர்களுக்கு நெருக்கடி கொடுத்தும், அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முடியாததால், கல்வித்துறை அலுவலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு துவங்கியது முதலே, அரசு பள்ளிகளில், பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க செய்ய, பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தேர்ச்சி விகிதம் குறையும், பள்ளியின் தலைமை ஆசிரியர் மீதும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என மறைமுகமாக மிரட்டலும் விடுக்கப்பட்டது.
மேலும், எந்த ஆண்டிலும் இல்லாத வகையில், காலாண்டு தேர்வு முடிவு, மாநில அளவில் கணக்கெடுக்கப்பட்டு, தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை செயலர் சபீதா தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. ப்ளஸ் 2 தேர்வில், அரசு பள்ளிகளில் 100 சதவிகித தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என, கல்வித்துறை அலுவலர்கள் முதல், ஆசிரியர்கள் வரை, விரட்டப்பட்டனர்.
தேர்வு சமயத்தில், 100 சதவிகித தேர்ச்சி இல்லாவிட்டாலும், தனியார் பள்ளிகளுக்கு இணையான தேர்ச்சி விகிதம் கிடைக்கும் என, பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், ப்ளஸ் 2 தேர்வு முடிவில், அரசுப்பள்ளிகள் 84.26 சதவிகிதம் மட்டுமே தேர்ச்சி பெற்றன. தனியார் பள்ளிகள், 97.67 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. தனியார் பள்ளிகளை விடவும், 13.41 சதவிகிதம் தேர்ச்சி விகிதத்தில் பின்னடைந்திருப்பது கல்வித்துறை அலுவலர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: கடந்த கல்வியாண்டு துவங்கியது முதலே, அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் குறிப்பாக, ஸ்லோ லேர்னர் தனியாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு சிறப்பு வகுப்புகளும், பயிற்சி கையேடுகளும் பிரத்யேகமாக வழங்கப்பட்டது.
ஒவ்வொரு திருப்பத்தேர்வின் போதும், அவர்களின் முன்னேற்றத்தை கண்காணித்து வந்தனர். பொதுத்தேர்வுக்கு முன் நடந்த திருப்பத்தேர்வு வரையில், குறைந்தபட்சம் அரசு பள்ளிகளில், 95 சதவிகித தேர்ச்சி உறுதி என நம்பப்பட்டது. ஆனால், 84.26 சதவிகிதம் மட்டுமே தேர்ச்சி என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ஆய்வு நடத்தியதில், ஏற்கனவே, ஸ்லோ லேர்னர் என பிரிக்கப்பட்டு, சிறப்பு பயிற்சி வழங்கப்பட்ட மாணவர்களே, தேர்ச்சி பெற தவறியுள்ளனர். அதாவது சிறப்பு பயிற்சியேடு வழங்கப்பட்டும், சிறப்பு பயிற்சி வழங்கியும், அவர்களால் தேர்ச்சி பெற முடியவில்லை.
ஒவ்வொரு முறை ஆலோசனைக் கூட்டத்திலும், அம்மாணவர்களை தேர்ச்சி பெற வைக்கவே கவனம் செலுத்தப்பட்டதால், அரசு பள்ளிகளில், ரேங்க் ஹோல்டர் என்பதே இல்லாமல் போய்விட்டது. தேர்ச்சி விகிதம் குறைந்தால், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மிரட்டல், ஆசிரியர்களின் கவனத்தை வேறு எதிலும் திரும்பாத வகையில், முடக்கிவிட்டது.
தேர்ச்சி விகிதம் அதிகரித்தால்தான், கல்வித்தரம் அதிகரித்ததாக அர்த்தம் என்ற தோற்றம், தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கு மட்டுமே உதவுகிறது. நடப்பு ஆண்டிலாவது தேர்ச்சி விகிதம் என்ற கடிவாளத்தை, ஆசிரியர்களுக்கு கட்டாமல், கல்வித்தரம் அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அரசு பள்ளிகளில் காலிப்பணியிடங்களை உடனுக்குடன் 10 தினங்களுக்குள் நிரப்ப வேண்டும்.மருத்துவ விடுப்பில் சென்றால் பதிலி நியமனம் அளிக்க வேண்டும்.
ReplyDeleteமாணவர்களுக்கான கற்பித்தல் நாட்கள் குறையாமல் பாா்க்க வேண்டும்.
இதையெல்லாம் விட்டு விட்டு ....எது செய்யினும் பயன் இல்லை. கிடைக்கவே கிடைக்காது.