Pages

Monday, May 18, 2015

பாடப்புத்தகம் தாண்டி பயில்வோம்


எப்பொழுதோ நிகழ்ந்ததை நிகழ்ந்தவாறு இப்பொழுதும் நாம் அறிந்து கொள்ள உதவுவது புத்தகங்கள். எங்கோ நடந்ததை கண்டுபிடித்து அதை இங்குள்ள  நமக்கு எடுத்து விளக்குபவை நூல்களே.
முன்னோர்களின் அறிவையும், அனுபவத்தையும் நமக்குள் இறக்கி வைக்கின்ற நண்பர்கள் நூல்கள் தான்.  வாசிப்பு ஒருவனை எப்போதும் தயாராக இருப்பவனாக உருவாக்குகிறது. வாழ்க்கையின் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளுகின்ற பேராற்றலைப்  புத்தகங்கள் நமக்கு புகட்டுகின்றன. நூல் படிக்கும் பழக்கம்: பொதுவாக நம்மிடையே நூல்கள் படிக்கும் பழக்கம் மிகக் குறைவாக உள்ளது. குறிப்பாக  தூக்கம் வருவதற்காகவே நம்மில் பலர் புத்தகங்களை படித்துக் கொண்டிருக்கிறோம். நேரம் போகவில்லை என்றாலும் சிலர் புத்தகம் படிக்கும்  பழக்கத்தை கொண்டுள்ளனர். ஆனால் இவைகளால் நமக்கு எந்த உபயோகமும் இல்லை. குறிப்பாக படிப்பதற்கு என்று நேரம் ஒதுக்கி சிறந்த நூல்களை  தேடி பிடித்து படிப்பவர்களே வாழ்க்கையில் முன்னேறும் பாதையில் சென்று கொண்டிருப்பவர்கள். 


நேரு தான் மறைந்த பின்பு தனது உடலின் மீது மலர்களுக்கு பதிலாக புத்தகங்களை வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். பொதுவுடமை  தத்துவத்தின் தந்தையாக விளங்கிய கார்ல் மார்க்ஸ் லண்டன் நூலகத்தில் 20 ஆண்டு காலம் படித்து ஆய்வு மேற்கொண்டவர் என்பது  குறிப்பிடத்தக்கது. இளமையில் தான் மிகச் சிறந்த பண்புகள் பதியம் போடப்படுகின்ற. நூல்கள் வாசிக்கும் ஆர்வத்தை இளமையிலேயே ஊட்ட  வேண்டும். பிள்ளைகள் பெற்றோர் சொல்வதை கேட்டு அறிந்து கொள்வதை விட அவர்களை பார்த்து அதிகம் கற்றுக்கொள்கிறது. எனவே முதலில்  பெற்றோர்கள் நூல்கள் வாசிப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். 

எது சிறந்த புத்தகம்? பாட நூல்களை படிப்பது மிகையாக மதிப்பெண் பெறுவதை நோக்கமாகக் கொண்டது. ஆனால் பொது நூல்கள் வாழ்கை முறை  மற்றும் ஒழுக்க நெறிகளை நோக்கமாகக் கொண்டது. நல்வாழ்வுக்கு அடித்தளம் அமைப்பது நற்குணங்கள், அந்த நற்குணங்களை நம்முள் விதைப்பது  புத்தகங்களே ஆகும். படிக்க எடுத்த பிறகு படித்து முடிக்கும் வரை கீழே வைக்க விடாமல் நமது ஆர்வத்தை தூண்டச் செய்கிற புத்தகம் எதுவோ  அதுவே சிறந்த புத்தகம். தூங்கச் சென்றவன் தூக்கம் வருவதற்காக புத்தகத்தை புரட்டும் போது அவனை தூங்க விடாமல் புரட்டிப் போடுகின்ற  புத்தகமே சிறந்த புத்தகம். எந்த நூல் ஒருவனை விழிப்படைய செய்கின்றதோ அதுவே சிறந்த நூலாகும். சிறந்த நூலை படிப்பதற்கு ஆகும் நேரத்தை  விட அதை தேர்ந்தெடுக்க ஆகும் நேரம் அதிகம்.

உங்கள் துறையில் நூல்கள்: உங்கள் துறையில் சிறந்து விளங்க என்னென்ன நூல்களைப் படிக்க வேண்டும் என்பதை முதலில் பட்டியலிடுங்கள்.  வருங்காலத்தில் தொழில் தொடங்க உள்ள அல்லது பணியாற்றவுள்ள அல்லது போட்டித் தேர்வு எழுத உள்ள பாடம் எது என்பதை தீர்மானித்து  விட்டால் அந்த பாடத்தில் உள்ள வேறு சில நூல்களையும் படிக்க வேண்டும். 

நூலகங்கள்: உங்கள் மனதிற்கு பிடித்த இன்பமயமான ஓர் இடத்தின் பெயரை சொல்லுங்கள் என்று ஆபிரகாம் லிங்கனிடம் கேட்டபோது என் மனதிற்கு  பேரின்பத்தை அள்ளி தரும் ஒரே இடம் நூலகம் தான் என்று கூறியுள்ளார். வீடு தோறும் நூலகம் வேண்டும் என்றார் அண்ணா. இன்றைய  காலகட்டத்தில் கணினி, இணையதளம் மூலம் வீட்டில் இருந்த படியே தேவையான செய்திகளை பெறமுடியும் என்றாலும் நூலகம் தனக்குரிய  இடத்தை இழந்து விட வில்லை. எவ்வளவு தான் தொழில் நுட்பம் வளர்ந்தாலும் ஒரு புத்தகத்தை கையில் எடுத்து படிப்பதில் தனிச் சுகம் உண்டு.

வாழ்வை முன்னேற்றும் வளமான நூல்கள்: வாழ்க்கையில் சிறந்து விளங்கிய அறிஞர்களின் வரலாறுகளை படிப்பது நம்மை சரியான வழியில்  நடக்கவும், நம்மிடமுள்ள குறைகளை வெளியே கொட்டி விட்டு நிறைகளை நிரப்பிக் கொள்ளவும் உதவும். நீங்கள் எந்த துறையில் சாதனை புரிய  விரும்புகின்றீர்களோ அந்த துறையில் உயர்ந்த நிலையை அடைந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை தேடிப் படியுங்கள். அவர்கள் சந்தித்த  தடைகளைத் தகர்த்தெறிய கடைபிடித்த அணுகு முறைகளை நமக்கு படிகளாக்கி கொள்ள வேண்டும். அவர்கள் விட்ட இடத்தை விட மேலேறிச்  செல்வதற்கும் அவை துணை புரியும். 

படிப்பதும் தியானமே: புத்தகம் படிப்பது கூட ஒருவகையான தியானம்தான். தியானம் என்றால் தன்னை மறத்தல். புறவுலக தாக்கங்கள் ஏதுமின்றித்  தன்னையே மறந்திருக்கிற நிலை நூல்களை ஆழ்ந்து படிக்கும் போது ஏற்படும். புத்தகப் பிரியர்களுக்கு நெஞ்சம் கவர்ந்த நூல்கள் கிடைத்து விட்டால்.  எதை பற்றியும் லட்சியம் செய்யமல் தொடர்ந்து படித்துக் கொண்டே இருப்பார்கள். இதுவும் ஒருவகை தியானமே. நம் வாழவில் சிக்கல்களை  எதிர்கொள்வதற்கும், சவால்களை சந்திப்பதற்கும் புத்தக வாசிப்பு பெருந்துணையாகிறது. 

பதவி, பட்டம் பெறுவதற்கு மட்டுமல்லாமல் ஒன்றை ஏற்கவோ, மறுக்கவோ, அதை பற்றி விவாதிக்கவோ நமக்கு தேவையான ஆற்றலை இந்த  வாசிப்பு வழங்கும். நம் ஒவ்வொருவரின் நேரமும் வெறும் பொக்கிசம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.