Pages

Saturday, May 16, 2015

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு நாளை முதல் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்: நேரடி விண்ணப்ப விநியோகம் இல்லை

கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 17) முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்புகளுக்கு இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும், நேரடி விண்ணப்ப விநியோகம் கிடையாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு (பி.வி.எஸ்சி.), பி.டெக். உணவுத் தொழில்நுட்பம், பி.டெக். கோழியின உற்பத்தித் தொழில்நுட்பம், பி.டெக் பால்வளத் தொழில்நுட்பம் ஆகிய மூன்று படிப்புகளில் சேருவதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.


எத்தனை இடங்கள்? கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கு 280 இடங்கள், பி.டெக். உணவு தொழில்நுட்பப் படிப்புக்கு 20, பி.டெக். கோழியின உற்பத்தித் தொழில்நுட்பப் படிப்புக்கு 20, பி.டெக். பால்வளத் தொழில்நுட்பப் படிப்புக்கு 20 என மொத்தம் 340 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் www.tanuvas.ac.in   என்ற இணையதளத்தில் மே 17-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாணவர்கள் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

கல்லூரி குறித்த விவரம், கூடுதல் விவரங்கள் அனைத்தையும் அந்த இணையதளத்தின் மூலமாகவே மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஜூன் 4-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். முதல்கட்டமாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து இணையதளம் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும். 

அதைத் தொடர்ந்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பிரின்ட் எடுத்து, புகைப்படம், சான்றொப்பம் பெறப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றை இணைத்து, தபால் மூலம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வேண்டும்.

ஜூன் 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டும்.

இதுகுறித்து கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் தேர்வுக்குழு அலுவலர் டாக்டர் திருநாவுக்கரசு கூறியது:

கடந்த ஆண்டு நேரடி விண்ணப்ப விநியோகம், இணையதள விண்ணப்பம் இரண்டு முறைகளையும் கையாண்டோம். இந்த ஆண்டு இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கும் முறையை அமல்படுத்தியுள்ளோம். கடந்த ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கு 15,500 பேரும், இதர படிப்புகளுக்கு 2,700 பேரும் என மொத்தம் 18,200 பேர் விண்ணப்பித்தனர். 
இந்த ஆண்டு அதைக் காட்டிலும் அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.