Pages

Monday, May 25, 2015

ஆசிரியர் + பெற்றோர் = சிறந்த மாணவர்கள்: தலைமை ஆசிரியரின் ஆலோசனை

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் அதிகபட்சமாக உச்சரிக்கும் வார்த்தைகள் தான், படி... படி... படி... மாணவர்களை சிந்திக்க விடாமல், சுதந்திரமாக நடக்கவிடாமல் எந்நேரமும் படிக்கச் சொன்னால் படிப்பு வராது. விரும்பி படித்தால் பாடம் மனதில் ஏறும். மாணவர்கள் விரும்பும் வகையில் பாடம் நடத்தவும் ஆசிரியர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார், மதுரை திருப்பாலை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன்.


பெற்றோரும், ஆசிரியர்களும் மாணவர்களிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்து அவர் கூறியதாவது:

மாணவர்களை பள்ளிக்கு சுத்தமாக அனுப்புவதை பெற்றோர், முதல் கடமையாக நினைக்க வேண்டும். வீட்டிற்குள் நடக்கும் கோபதாபங்களை பிள்ளையிடம் காட்டக்கூடாது. மாதம் ஒருமுறை வகுப்பாசிரியரை சந்தித்து, பிள்ளையின் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க வேண்டும். உடன் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்களை பற்றி பிள்ளையிடம் கேட்க வேண்டும்.பிள்ளைகள் பதட்டத்துடன் இருந்தால் ஏதோ பிரச்னை என்பதை புரிந்து கொண்டு, அன்போடு நிதானமாக 
விசாரிக்க வேண்டும். நட்பு வட்டம் நன்றாக உள்ளதா என்பதை கண்காணித்தால், பிள்ளையின் நாட்டம் படிப்பில் உள்ளதா என்பதை உணரமுடியும். பள்ளியில், பள்ளி செல்லும் வழியில் நடந்த நிகழ்வுகளை பிள்ளையிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். பிள்ளைகளுக்காக தினமும் கொஞ்சநேரம் ஒதுக்கி, அவர்களின் பிரச்னையை, சந்தோஷத்தை, வருத்தத்தை பகிர்ந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.

சிறுபாராட்டு வேண்டும் 

என்னதான் பிள்ளைகள் சிறுசிறு தவறுகள் செய்தாலும் தினமும் ஏதாவது ஒரு விஷயத்திற்காவது பாராட்ட மறக்கக்கூடாது. பாராட்டு தான் மனிதனை முழுமையாக்கும்.ஆசிரியர்கள் தமிழ், ஆங்கில பாடங்களை சத்தமாக வாசிக்க மாணவர்களை அனுமதித்தால், பயஉணர்வு போய்விடும். தமிழோ, ஆங்கிலமோ வாசிக்க தெரியாவிட்டால், மாணவர்களை மனப்பாடம் செய்ய கட்டாயப்படுத்தக்
கூடாது. சிறு சிறு வார்த்தைகளாக பிரித்து வாசிக்க, எழுதச் சொல்ல வேண்டும். அதன்பின்பே மனப்பாட முறை சாத்தியமாகும். புத்தகங்களை அட்டவணைப்படி கொண்டுவர அறிவுறுத்த வேண்டும்.

கண்காணிப்பு அவசியம் வெறுமனே பாடங்களை மட்டும் நடத்தாமல் தினசரி செய்தித்தாளை படித்து, அதிலுள்ள சமூக நிகழ்வுகளை ஒப்பிட்டு நடத்த வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் எளிதில் பாடங்களை மறக்க மாட்டார்கள். மெதுவாக படிக்கும் மாணவர்களை, மாணவர் தலைவன், பெஞ்ச் தலைவன் மூலம் கண்காணிக்கவிடக்கூடாது. ஆசிரியரே நேரடியாக கண்காணித்தால் மாணவர்களின் கல்வித்தரம் உயரும். பெற்றோர் போன் எண்களை வாங்கி வைக்க வேண்டும். நேர்மறையான கதைகளை அவ்வப்போது வகுப்பறையில் சொல்ல வேண்டும். பாடங்கள் புரியாவிட்டால் மறுபடி நடத்துவதில் தவறில்லை.
புதிய கல்வி ஆண்டு மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சாதனை ஆண்டாக அமையட்டும்.

இவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.