Pages

Saturday, May 23, 2015

மே இறுதிக்குள் பிளஸ் 2 விடைத்தாள் நகல்

பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் மே 30-ஆம் தேதிக்குள் விடைத்தாள் நகல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன.


இந்த ஆண்டு அனைத்துப் பாடங்களிலும் விடைத்தாள் நகல் கோரி ஒரு லட்சத்து 9 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு இயற்பியல் பாடத்தில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை சரிந்துவிட்டது. வெறும் 124 பேர் மட்டுமே முழு மதிப்பெண் பெற்றனர். உயிரியல் பாடத்திலும் முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது.


பிளஸ் 2 விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. ஞாயிறு அல்லது திங்கள்கிழமை இந்த விடைத்தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து சோதிக்கப்படும். அனைத்து விவரங்களும் சரியாக இருந்தால் அடுத்த வாரத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் ஒவ்வொரு பாடமாக விடைத்தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தப் பணிகள் அனைத்தையும் மே இறுதிக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் பெற்ற மாணவர்களே விடைத்தாள் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும். விடைத்தாள் மறு மதிப்பீடு, மறு கூட்டல் ஆகிய முடிவுகள் ஒரே சமயத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறு கூட்டல், மறு மதிப்பெண்ணுக்குப் பிறகு மதிப்பெண்ணில் மாறுதல் இருந்தால் அவை மேற்கொள்ளப்படும். அதன் பிறகே, பிளஸ் 2 மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

உயர் கல்வியில் சேருவதற்கு வசதியாக பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல்முறையாக இந்த ஆண்டு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

இந்தச் சான்றிதழ் 90 நாள்களுக்குச் செல்லத் தக்கதாக இருக்கும் என்பதால், அசல் மதிப்பெண் சான்றிதழ் சற்றுத் தாமதமாக வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.