Pages

Tuesday, May 26, 2015

பொறியியல் கல்லூரி மாணவர் தேர்ச்சி விவரம் வெளியீடு: 19 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் தேர்ச்சி விகிதம்

பொறியியல் கல்லூரிகளின் 2014-ஆம் ஆண்டு இரு பருவத் தேர்வுகளின்மாணவர் தேர்ச்சி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 19 கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் ஒற்றை இலக்கத்திலேயே இருப்பது தெரியவந்துள்ளது. மொத்தம் 525 இணைப்புப் பொறியியல் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகித விவரம், அண்ணா பல்கலைக்கழகத்தின் w‌w‌w.a‌n‌na‌u‌n‌i‌v.‌e‌d‌u இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் மேற்கொண்டுள்ளது.2014-ஆம் ஆண்டு ஏப்ரல்- மே, நவம்பர்- டிசம்பர் ஆகிய இரு பருவத் தேர்வுகளின் (செமஸ்டர்) மாணவர் தேர்ச்சி விகிதங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
அதிர்ச்சி அளிக்கும் விவரம்:
இந்தத் தேர்ச்சி விகிதப் பட்டியலின் அடிப்படையில், சில கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர் தேர்ச்சி விகிதம் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.தஞ்சையிலுள்ள ஒரு தனியார் கல்லூரி இரு பருவத் தேர்வுகளிலும் மிகக் குறைந்ததேர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது. ஏப்ரல்- மே தேர்வில் 4.58 சதவீத தேர்ச்சியையும், நவம்பர்- டிசம்பர் பருவத் தேர்வில் 3.02 சதவீத தேர்ச்சியையும் இந்தக் கல்லூரி பெற்றிருக்கிறது. இந்தக் கல்லூரியில் நவம்பர்- டிசம்பர் பருவத் தேர்வை எழுதிய 563 பேரில் 17 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக விழுப்புரத்தைச் சேர்ந்த கல்லூரியில் 231 பேர் தேர்வெழுதி14 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுபோல, மொத்தம் 19 கல்லூரிகளில் ஒற்றை இலக்க தேர்ச்சி விகிதம் உள்ளது. கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி 96.95 மாணவர் தேர்ச்சி விகிதத்துடன் 2014 ஏப்ரல்- மே பருவத் தேர்வில் முதலிடம் பிடித்துள்ளது. கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 98.33 தேர்ச்சி விகிதத்துடன் நவம்பர்- டிசம்பர் பருவத் தேர்வில் முதலிடம் பிடித்திருக்கிறது.இந்தப் பட்டியலின்படி 5 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே 90 சதவீத தேர்ச்சி விகிதத்தைப் பெற்றிருக்கின்றன.
20 கல்லூரிகள் 80 சதவீதத்துக்கு மேலும், 37 கல்லூரிகள் 70 சதவீதத்துக்கு மேலும், 74 கல்லூரிகள் 60 சதவீதத்துக்கு மேலும், 85 கல்லூரிகள் 50 சதவீதத்துக்கு மேலும் மாணவர் தேர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளன.மீதமுள்ள 309 பொறியியல் கல்லூரிகளிலும் 50 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் தேர்ச்சி விகிதமே உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாணவர் தேர்ச்சி விகிதப் பட்டியல் பொறியியல் கல்லூரிகளின் கல்வித் தரம் குறித்து அறிந்துகொள்ள மாணவர்களுக்கு ஓரளவுக்கு உதவிகரமாக இருக்கும் என்று பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.