Pages

Tuesday, May 19, 2015

1,800 'டுபாக்கூர்' நர்சிங் பள்ளிகள் மூடல்

தமிழகத்தில், மத்திய, மாநில அரசுகள் அனுமதி பெற்றதாக, போலி விளம்பரங்களுடன், ஏழை மாணவர்களை குறிவைத்துச் செயல்படும், 1,800, 'டுபாக்கூர்' நர்சிங் பயிற்சி பள்ளிகளை, தமிழக அரசு இழுத்து மூடுகிறது.தமிழகத்தில், நர்சிங் பயிற்சி அளிக்கும் கல்லூரிகள், பள்ளிகள் அரசின் முறையான அனுமதி பெறுவதோடு, தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும். இத்தகைய பள்ளி, கல்லூரிகளில் படித்து வெளியேறுவோர், நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்து பணியாற்றலாம்.


நர்சிங் கவுன்சில் அனுமதி இல்லாமல், தமிழகத்தில், மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்றதாகவும், 'பாரத் சேவாக் சமாஜ்' அங்கீகாரம் பெற்றதாகவும், போலி விளம்பரங்களுடன், ஏராளமான நர்சிங் கல்லூரிகள், பள்ளிகள் உள்ளன.இதில், நர்சிங் உதவியாளர், கிராம செவிலியர், சுகாதார உதவியாளர் என, வெவ்வேறு பெயர்களில், 12 விதமான, ஆறு மாத, மூன்று மாத படிப்புகள் நடத்தப்படுகின்றன.


விவரம் தெரியாத ஏழை மாணவர்கள், 'குறைந்த கட்டணம்; பயிற்சியின் போதே சம்பளம்...' என்ற, போலி விளம்பரங்களை நம்பி ஏமாறுகின்றனர்.படிப்பை முடிந்து, சான்றிதழை பதிவு செய்ய, நர்சிங் கவுன்சில் சென்றால், 'அனுமதி இல்லாத இடத்தில் படித்துள்ளீர்கள்; பதிவு செய்ய முடியாது' என, திருப்பி அனுப்பும்போது தான், ஏமாற்றப்பட்டது தெரிகிறது.

இத்தகைய, 'டுபாக்கூர்' மையங்களை தடுப்பதற்காக, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், 'தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் அனுமதி இன்றி, 'பாரத் சேவாக் சமாஜ்' உள்ளிட்ட, பல பெயர்களில் செயல்படும் பயிற்சி மையங்கள் மீது, நான்கு வாரங்களுக்குள், மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளது.இதைத் தொடர்ந்து, நர்சிங் கவுன்சில், அதிரடி நடவடிக்கையில் குதித்துள்ளது. மாநிலத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம், அனுமதியின்றி செயல்படும், 1,800 நர்சிங் பயிற்சி மையங்களை கண்டறிந்துள்ளது.

இந்த பட்டியலுடன், நீதிமன்ற உத்தரவு விவரங்களை, தமிழக அரசுக்கு அனுப்பி உள்ளது. 'அரசு அனுமதி கிடைத்ததும், இந்த நிறுவனங்களை இழுத்து மூடும் நடவடிக்கை பாயும்' என, சுகாதாரத் துறையினர் கூறினர்.கர்நாடகாவில், 'பாரத் சேவாக் சமாஜ்' என்ற பெயரில் செயல்பட்டு வந்த, இதுபோன்ற நர்சிங் பள்ளிகளை, இரண்டு ஆண்டுகளுக்கு முன், கோர்ட் உத்தரவு பெற்று, மாநில அரசு இழுத்து மூடியது குறிப்பிடத்தக்கது.


373க்கு தான் அனுமதி

தமிழகத்தில், 169 நர்சிங் கல்லூரிகள், 204 நர்சிங் பள்ளிகள் அனுமதி பெற்றுள்ளன. இதன் விவரங்களைwww.tamilnadunursingcouncil.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.