ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த ஏர்ப்பேடு அருகே வியாச ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. அந்த ஆசிரமத்திற்குள் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர்.
தற்போது ஆந்திராவில் பிளஸ்–1 மற்றும் பிளஸ்–2 வகுப்புகளுக்கான இணைப்பு தேர்வுகள் நடந்து வருகின்றன. இந்த தேர்வில், தங்கள் பள்ளியின் அனைத்து மாணவ – மாணவிகளும் (100 சதவீதம்) தேர்ச்சி பெற வேண்டும் என்று அந்த பள்ளிக்கூட தலைமை ஆசிரியரும், ஆசிரம நிர்வாகிகளும் விரும்பினார்கள்.
அத்துடன். இதை பயன்படுத்தி பணம் சேர்க்கும் ஆசையும் அவர்களுக்கு உருவானது. இந்த இரண்டு ஆசைகளையும் நிறைவேற்ற, அவர்கள் குறுக்கு வழியில் ஒரு திட்டம் வகுத்தனர். அதன்படி, மாணவர்களுக்கு தேர்வு விடைகள் அடங்கிய ‘பிட்’ கொடுப்பது என முடிவு செய்தனர்.
அதன்படி வியாச ஆசிரம செயலாளர் அமர்நாத் ரெட்டி, பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராமய்யா, குமாஸ்தா சிவக்குமார், ஊழியர்கள் சதாசிவம், அசோக்குமார் ஆகிய 5 பேரும் சேர்ந்து, தேர்வு வினாக்களுக்கு உரிய பதில்களை சிறு சிறு தாள்களில் எழுதி ‘பிட்’ தயாரித்தனர்.
பின்னர் அந்த ‘பிட்’களை மாணவர்களுக்கு வினியோகித்தனர். அத்துடன், ‘பிட்’ வழங்கியதற்காக ஒவ்வொரு மாணவரிடமும் இருந்து குறிப்பிட்ட தொகையை வசூல் செய்து கொண்டனர்.
இதுபற்றிய ரகசிய தகவல், போலீசுக்கு தெரியவந்தது. உடனே கல்வித்துறை அதிகாரிகளின் துணையுடன் காஜுலமண்டியம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அதிரடியாக தேர்வு அறைகளுக்குள் புகுந்து, மாணவர்களிடம் இருந்து ‘பிட்’களை கைப்பற்றினார்கள்.
இதுதொடர்பாக ஆசிரம செயலாளர் அமர்நாத் ரெட்டி, பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராமய்யா, குமாஸ்தா சிவக்குமார், ஊழியர்கள் சதாசிவம், அசோக்குமார் ஆகிய 5 பேரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மேலும், கைதான 5 பேரிடமும் இருந்து, ‘பிட்’ கொடுத்ததற்காக வசூல் செய்த பணம் ரூ.52 ஆயிரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 5 பேரும் திருப்பதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, காவலில் வைக்கப்பட்டனர். மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.