பொதுத்தேர்வில் 75 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது என்று வாட்ஸ் அப்பில் வெளியான தகவலால் வேலூர் சிஇஓ அலுவலகத்துக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல், ‘வாட்ஸ் அப்’ மற்றும் எஸ்.எம்.எஸ் மூலமாக ஒரு குறுஞ்செய்தி வேகமாக பரவியது.
அதில் ‘மாவட்டத்தில் உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பில் 75 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மத்திய அரசின் அப்துல்கலாம் மற்றும் மோடி கல்வி உதவித்தொகை திட்டத்தின்மூலம் தலா ₹10 ஆயிரம் வழங்கப்படுகிறது. இவற்றை முதன்மை கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்து விரைவில் பணம் பெற்றுச்செல்லலாம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவல் பரவியதும், வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிஇஓ அலுவலகத்துக்கு மாணவர்களும், பெற்றோரும் படையெடுத்தனர்.
திடீரென மாணவர்கள் வந்ததால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், அப்படி எந்த உதவித்தொகையும் வழங்கவில்லை, வாட்ஸ் அப் தகவல் பொய்யானது என்று கூறி மாணவர்களை திருப்பி அனுப்பினர். இந்தநிலையில் நேற்றும் 50க்கும் மேற்பட்டவர்கள் வந்து கல்வி உதவி பெறுவதற்கான விண்ணப்பங்கள் கொடுங்கள் என்று அதிகாரிகளிடம் கேட்டனர். இதற்கு பதிலளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர். பின்னர், ‘அப்படி திட்டம் எதுவும் அரசு அறிவிக்கவில்லை. யாரோ வதந்தி கிளப்பி விட்டுள்ளனர்’ எனக்கூறி திருப்பி அனுப்பினர். இதனால் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறும் போது, ‘யாரோ விஷமிகள் இதுபோன்ற தவறான தகவலை பரப்பி உள்ளனர். இதுபற்றி போலீசில் புகார் செய்ய உள்ளோம்’ என்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.