Pages

Monday, May 18, 2015

எல்.கே.ஜி., இலவச சேர்க்கைக்கு அரசு உதவி மறுப்பு : 1 முதல் 9ம் வகுப்பு வரையே சேர்க்க முடியும்

'தமிழகத்தில், கல்வி உரிமைச் சட்ட விதிகளுக்கு முரணாக, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., மாணவர் சேர்க்கைக்கு, நிதி அளிக்க முடியாது' என, மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி ஏழைகள், நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு, தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு கல்வி ஆண்டும், 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
இதில், 2013 - 14ம்கல்வியாண்டில், 49 ஆயிரத்து, 864 பேர்; 2014 - 15ல், 86 ஆயிரத்து, 729 பேர், தனியார் பள்ளிகளில் நுழைவு நிலை எல்.கே.ஜி.,யில் சேர்க்கப்பட்டனர். இதற்கு, 2013 - 14ல், 25.13 கோடி ரூபாய்; 2014 - 15ல் ரூ.71.91 கோடி ரூபாய் தருமாறு, மாநில அரசிற்கு தனியார் பள்ளிகள் கோரின.இதற்கு நிதி தருமாறு, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியது. ஆனால், 2014 ஏப்ரல் 1 முதல் மட்டுமே நிதி கணக்கிடப்படும் என, மத்திய அரசு தெரிவித்தது. அதே நேரம், 2014 - 15ல், 71.91 கோடி ரூபாய் என்பது வெறும், 14 லட்சம் ரூபாயாக ஏற்கப்பட்டது. இதனால், தமிழக அரசே, 96 கோடி ரூபாயை, தனியார் பள்ளிகளுக்கு வழங்கியுள்ளது.
நிதி இழப்பு குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:மத்திய அரசின் கட்டாயக் கல்விச் சட்டப்படி, ஆறு வயது முதல் ஒன்பது வயது வரையுள்ள வகுப்புகளில் கட்டாயக் கல்வி கொடுக்கவே, நிதி தர மத்திய அரசு ஒப்புக் கொண்டது. ஆனால், தமிழகத்தில் மூன்றரை வயது குழந்தைகளை, தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., வகுப்பில் சேர்த்து விட்டு, நிதி கேட்கப்பட்டது. மத்திய அரசைப் பொறுத்தவரை, ஆறு வயதில் தான் பள்ளிப் படிப்புக்கு அனுமதி உள்ளது. அதனால், விதிகளுக்கு முரணான சேர்க்கைக்கு நிதி தர முடியாது என, மறுத்து விட்டது. எனவே, இனி வரும் காலங்களில், ஒன்றாம் வகுப்பில் இருந்தே, இலவச சட்டத்தில் மாணவர்களை சேர்க்க முடியும்.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.
சட்ட சிக்கல்:
இதுகுறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க மாநில பொதுச் செயலர் நந்தகுமார் கூறியதாவது:மத்திய அரசின் சட்டப்படி, ஆறு முதல், 14 வயது வரையிலான வகுப்புகளுக்கு மட்டுமே, 25 சத இடஒதுக்கீடுவழங்க வேண்டும். தமிழக அரசு கேட்டுக் கொண்டதால், நுழைவு வகுப்பான, எல்.கே.ஜி.யில் நாங்கள் இட ஒதுக்கீடு அளிக்கிறோம்; அரசும் நிதி தருகிறது. ஆனால், வரும் காலங்களில் சட்ட சிக்கலை தவிர்க்க, ஒன்றாம் வகுப்பு முதல், 25சத ஒதுக்கீட்டையே அமல்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.