Pages

Friday, April 3, 2015

சிறப்பாசிரியர் போட்டித் தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரக் கோரிக்கை


சிறப்பாசிரியர்களின் போட்டித் தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டுமென தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


இதுதொடர்பாக, தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்க மாநிலத் தலைவர் ராஜ்குமார் தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு முன் தேதியிட்டு அறிவிக்கப்பட்ட ஊதியத்தை நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதி நேர ஆசிரியர்களுக்கும் வங்கி வரைவோலையாக வழங்கியதற்கு சங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது. அதேபோல, பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய  வேண்டும் என்ற கோரிக்கையையும் கலை ஆசிரியர் சங்கம் முதல்வரின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளது.

இந்நிலையில், சிறப்பாசிரியர்களுக்கான ஓவியத் தேர்வு பாடத்திட்டம் மிகவும் கடுமையாக உள்ளதால் இப்பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என ஏற்கெனவே முதல்வரின் தனிப்பிரிவிற்கும் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சிறப்பாசிரியர் பணி நியமனத்திற்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி, தேர்வுத் துறையில் தொழில்நுட்பத் தேர்வு தேர்ச்சி, பள்ளிக் கல்வி இயக்குநரால் நடத்தப்படும் டிடிசி எனப்படும் தொழிலாசிரியர் சான்றிதழ் பயிற்சி என்பவற்றின் அடிப்படையில் நியமனம் என்பதே நடைமுறையாகும்.

ஆனால், தற்போது போட்டித் தேர்வு முறையை அரசு அறிமுகப்படுத்தியுள்ளதால் இதற்கான போட்டித் தேர்வு பாடத்திட்டத்தை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த ஓவியப் பாடத்திட்டத்திற்கான புத்தகங்கள் கிடைப்பதில்லை.

இந்நிலையில், சிறப்பாசிரியர்களுக்கு போட்டித் தேர்வு ஜுன் மாதத்தில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வாணையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கலை ஆசிரியர் நலச் சங்கத்தின் சார்பில் முதல்வர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், அரசு செயலர், இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. அதில், தாங்கள் படித்த படிப்பிற்கு தொடர்பில்லாத பாடத் திட்டம் இப்போட்டித் தேர்வில் இடம் பெறக்கூடாது எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இப்பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவர முடியாவிட்டால் போட்டித் தேர்வை நீக்கிவிட்டு, மாநிலப் பதிவு முன்னுரிமையை மீண்டும் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

1 comment:

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.