Pages

Friday, April 24, 2015

ஆய்வக உதவியாளர் பணியிடத்துக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை (ஏப்.24) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு மே 31-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பத்தை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.


அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளம் மூலம் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி மே 6-ஆகும். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, முன்னுரிமைக்கான சான்றிதழ், உயர் கல்வித் தகுதிச் சான்றிதழ், பணி முன் அனுபவச் சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களின் அசல், நகல்களை எடுத்துச் செல்ல வேண்டும்.

இந்தப் பணி நியமனம் ஒவ்வொரு மாவட்ட அளவிலும் நடைபெறுகிறது. போட்டித் தேர்வில் வெற்றிபெறுபவர்களில் இருந்து 1:5 என்ற விகிதத்தில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளனர். மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம் பெற்றிருப்பர். நேர்முகத் தேர்வு மொத்தம் 25 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட உள்ளது. இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு பணி நியமனம் வழங்கப்படும். 

மதிப்பெண் விவரம் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் விவரங்கள் தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்புக்கு அதிகபட்சம் 10 மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 1 முதல் 2 ஆண்டுகள் வரை காத்திருப்போருக்கு 2 மதிப்பெண், 2 முதல் 4 ஆண்டுகள் வரை காத்திருப்போருக்கு 4 மதிப்பெண், 4 முதல் 6 ஆண்டுகள் வரை காத்திருப்போருக்கு 6 மதிப்பெண், 6 முதல் 8 ஆண்டுகள் வரை காத்திருப்போருக்கு 8 மதிப்பெண், 10 ஆண்டுகள், அதற்கு மேல் காத்திருப்போருக்கு 10 மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.

பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தால் 2 மதிப்பெண், இளங்கலைப் பட்டப் படிப்பு, அதற்கு மேல் படித்திருந்தால் 3 மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். தனியார், அரசுப் பள்ளி அல்லது கல்லூரிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்ததற்கான சான்று இருந்தால் அதற்கு 2 மதிப்பெண்கள். மேலும், நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு 8 மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.