Pages

Monday, April 6, 2015

ஸ்மிருதி இரானிக்கு கல்தா?

ஸ்மிருதி இரானியை, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக நியமித்தபோது, இவ்வளவு பெரிய அமைச்சகத்தை, இரானி எப்படி கையாளப்போகிறார் என, சீனியர் பா.ஜ., தலைவர்கள் சந்தேகப்பட்டனர். மேலிடத்திற்கு நெருக்கம் என்பதால், இரானியை எதிர்த்து யாரும் குரல் எழுப்பவில்லை. ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. இரானியின் இலாகா பறிக்கப்படும் என, பா.ஜ., வட்டாரங்களில் பேசப்படுகிறது. அப்படி என்ன நடந்துவிட்டது?

கடந்த 11 மாதங்களாக, பா.ஜ., தலைவர்களுக்குள் இரானிக்கு எதிராக உள்ளுக்குள்ளேயே குமுறிக்கொண்டிருந்த கோபம், தற்போது வெளியே வந்துவிட்டது என்கிறது பா.ஜ., வட்டாரம். டில்லி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ., முதல்வர், வேட்பாளராக தன்னை அறிவித்திருக்க வேண்டும் என்பது, இரானியின் விருப்பம். கிரண்பேடி முதல்வர் வேட்பாளர் என, பா.ஜ., அறிவித்தது இரானிக்கு பிடிக்கவில்லை. 'பேடிக்கு பதிலாக இரானியைப் போட்டிருக்கலாம்; பேடியால் தோல்விதான் கிடைக்கும்' என, இரானியைச் சந்திக்க வந்த பா.ஜ., தலைவர்களிடம் சொன்னாராம்,
இரானியின் கணவர். ஒரு சீனியர் அமைச்சரும் உ.பி., பா.ஜ., தலைவருமான அந்த நபர், இரானியை சந்தித்து, அவருடைய துறையின் உதவி கேட்டபோது, மரியாதைக் குறைவாக பேசினாராம். இன்னொரு பக்கம் சீனியர் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை கேவலமாக நடத்துகிறார்; பைல்களை அதிகாரிகள் மீது தூக்கி அடிக்கிறார் என்ற குற்றச்சாட்டும், அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.இப்படி பல விஷயங்கள், கட்சி தலைவர் அமித் ஷா காதுக்குப் போனது.
விளைவு, கட்சியின் தேசிய குழுவிலிருந்து இரானி நீக்கப்பட்டார். இதனால், பெங்களூரில் நடைபெற்ற, பா.ஜ., தேசியக்குழு கூட்டத்தில், இரானி கலந்து கொள்ள முடியவில்லை.
அதே நாளில், கோவாவில் ஒரு துணிக்கடைக்கு சென்ற இரானி, அங்கு உடை மாற்றும் இடத்தில், ரகசிய கேமரா வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
அது ரகசிய கேமரா கிடையாது என, கடை மறுத்தாலும் போலீசிடம் திடுக்கிடும் ஆதாரங்கள் உள்ளதாம். இதில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியால், மீடியாக்கள் அனைத்தும் இரானி செய்தியை காட்ட, பா.ஜ., பெங்களூரு மாநாடு செய்தி, அடிபட்டுப் போனது.
மோடி பிரதமராக பதவியேற்று, ஓராண்டு முடிய உள்ள நிலையில், விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றம் நடைபெற உள்ளது. அதில் இரானியின் பதவி பறிக்கப்படும் என, பேச்சு அடிபடுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.