அண்ணா பல்கலையுடன் இணைந்த பொறியியல் கல்லுாரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் மே மாதம் வழங்கப்படும்; ஜூலையில் கவுன்சிலிங் நடத்தப்படும் என, அண்ணா பல்கலை துணைவேந்தர் ராஜாராம் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலையின் நேரடிக் கட்டுப்பாட்டில் 16 பொறியியல் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதுதவிர, 593 அரசு உதவிபெறும் சிறுபான்மை மற்றும் சுயநிதி பொறியியல் கல்லுாரிகளில், மொத்தம் 2.5 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களின் அரசு ஒதுக்கீட்டு மாணவர் சேர்க்கை, ஒற்றை சாளர முறையில், அண்ணா பல்கலை மூலம் நடத்தப்படுகிறது.
இதற்கான விண்ணப்பங்கள், பிளஸ் 2 தேர்வு முடிவு வருவதற்கு ஒரு வாரம் முன் வினியோகிக்கப்படும். இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவு, மே முதல் வாரத்தில் வெளியாகும் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அண்ணா பல்கலை துணைவேந்தர் ராஜாராம் கூறியதாவது: மருத்துவம் உள்ளிட்ட பல படிப்புகளுக்கு, தேர்வுகள் மற்றும் கவுன்சிலிங் நடக்கிறது. இதை கருத்தில் கொண்டு, அண்ணா பல்கலையின் பொறியியல் விண்ணப்பங்கள், மே முதல் வாரத்திற்குள் வினியோகம் செய்யப்படும்.
பின், மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங், ஜூலையில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது; இதன் தேதி விவரங்களை தமிழக அரசு வெளியிடும்.
அண்ணா பல்கலையின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லுாரிகளில், எத்தனை கல்லுாரிகளுக்கு இணைப்பு அங்கீகாரம் வழங்கப்படும்; எத்தனை கல்லுாரிகளில் எத்தனை படிப்புகள் உள்ளன; புதிய படிப்புகள் போன்ற விவரங்கள், அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகார அறிவிப்பு வந்ததும் வெளியிடப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.