பேரணாம்பட்டு அருகே பள்ளியில் முன்னதாகவே இறைவணக்கம் ஏற்பாடு செய்ததை தட்டிக்கேட்ட தலைமை ஆசிரியர் முகத்தில் ஆசிரியர் குத்துவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பத்தலபல்லி கிராமத்தில் ஊராட்சி நடுநிலை பள்ளி உள்ளது. இங்கு 270 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் பேரணாம்பட்டை சேர்ந்த வள்ளுவன்(48) என்பவர் தலைமை ஆசிரியராகவும், பத்தலப்பல்லி கிராமத்தை சேர்ந்த ராஜிவ்(30) உள்பட 7 பேர் ஆசிரியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். தலைமை ஆசிரியருக்கும், ஆசிரியர் ராஜிவ்வுக்கும் முன்விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் தொிவிக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதற்குள் 15 நிமிடம் முன்னதாகவே ஆசிரியர் ராஜிவ் மாணவர்களை வைத்து இறைவணக்கம் நடத்தியுள்ளார். இதுகுறித்து ராஜிவ்விடம் தலைமையாசிரியர் கேட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிற்பகல் 1.30 மணியளவில் தலைமை ஆசிரியர் அறைக்கு வந்த ஆசிரியர் ராஜிவ், தலைமை ஆசிரியர் வள்ளுவன் முகத்தில் ஓங்கி குத்தியதாக கூறப்படுகிறது. அவர் கூச்சலிட்டபடி வெளியே ஓடிவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரது புகாரின்படி பேரணாம்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.