Pages

Tuesday, April 21, 2015

வழக்குகள் அதிகரிப்பு எதிரொலி: ஆசிரியர் நியமனங்களை நிறுத்தி வைக்க டிஆர்பி முடிவு!

போலி சான்றிதழ், இன வாரியான முன்னுரிமை வழங்குதல், தகுதி நிர்ணய குழப்பம் ஆகியவற்றால் கல்வித்துறையில் புதிய நியமனங்களை நிறுத்தி வைக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. தகுதி தேர்வு நடத்த வேண்டும் என்று அரசு அறிவித்த நாளில் இருந்தே ஆசிரியர் தேர்வு வாரியம் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது 400க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பெரும்பாலான வழக்குகள் வெயிட்டேஜ் மதிபெண் தொடர்பாகவும், இன வாரியான ஒதுக்கீடு வழங்காதது குறித்தும் தான் இருக்கிறது. இந்த வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர அரசு தரப்பில் அதிக கவனம் எடுப்பதாக தெரியவில்லை. அதிமுக ஆட்சி இன்னும் 1 ஆண்டுதான் உள்ள நிலையில் இப்படியே வழக்குகளை இழுத்தடித்துவிட்டு தேர்தலை சந்திக்க அதிமுக கட்சிமுடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஆசிரியர் தேர்வு வாரிய நடவடிக்கைகளை நீதிமன்றம் தொடர்ச்சியாக கண்டித்து வருகிறது. ஆனாலும் அரசு கொள்கை முடிவு, அரசு உத்தரவுகளை காட்டி ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் வழக்குகளை இழுத்தடித்து வருகின்றனர். இதனால் பல ஆயிரம் பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு எதிரான பிரச்னைகள் தொடர்கின்றன. ஆசிரியர் தேர்வில் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தினர், பார்வையற்ற பட்டதாரிகள் தொடர்ந்த வழக்கில் அரசு செயலாளர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு ஆசிரியை போலி சான்று மூலம் ஆசிரியர் பணிக்கு சேர்ந்தது தெரியவந்தது. அரசு கலைக் கல்லூரிகளில் தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்வதில் ஏற்பட்ட பிரச்னையால் நீதிமன்றத்தில் வழக்கு, கணினி ஆசிரியர் நியமனத்தில் முன்னாள் ராணுவத்தினர் இட ஒதுக்கீட்டில் குளறுபடி, இது போன்ற பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவித்துவருகிறது ஆசிரியர் தேர்வு வாரியம். இவை எல்லாம் தவறு என்று சுட்டிக்காட்டும் போது ஏதாவது ஒரு அரசு உத்தரவைக் காட்டி இதன்படி நாங்கள் செய்தோம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தப்பித்து வருகின்றனர். இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு கண்டபிறகே அடுத்தகட்ட நியமனத்துக்கான பணிகள் நடக்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அத்துடன் இந்த அரசின் காலம் முடிய இன்னும் ஒரு ஆண்டு உள்ள நிலையில் இப்படியே விட்டுவிட்டு செல்லவும் முடிவு செய்துள்ளனர். இதனால் கல்வித்துறை அதிகாரிகள் புதிய நியமனங்களை செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். பட்டதாரிகள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.