Pages

Thursday, April 23, 2015

கழிப்பறையை சுத்தப்படுத்த மாணவர்களை வற்புறுத்திய பள்ளி நிர்வாகி, ஆசிரியைகள் உள்பட 8 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே பள்ளிக் கழிப்பறையைச் சுத்தப்படுத்த மாணவர்களை வற்புறுத்தியதாக பள்ளி நிர்வாகி, ஆசிரியர்- ஆசிரியைகள் என 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து, 8 பேரை புதன்கிழமை கைது செய்தனர்.

களக்காடு அருகே உள்ள கீழப்பத்தை பண்டிதன்குறிச்சியில் அரசு உதவிபெறும் தனியார் உயர் நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 500 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
கடந்த 16-ஆம் தேதி பள்ளிக் கழிப்பறையில் உள்ள அடைப்புகளைச் சுத்தப்படுத்த சில மாணவர்களை பள்ளி நிர்வாகம், ஆசிரியைகள் சிலர் வற்புறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக, கீழப்பத்தை, கீழவடகரை கிராம மக்கள் திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டனர். இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோரிடம் களக்காடு காவல் நிலையத்தில் நான்குனேரி காவல் துணைக் கண்காணிப்பாளர் சண்முகம் விசாரணை நடத்தினார். எனினும், பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்காததால் கீழவடகரை, கீழப்பத்தை கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் ஒன்றுதிரண்டு, திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் அளித்தனர்.
இதையடுத்து, பள்ளி நிர்வாகி சாலமோன் ஜெபா, தலைமை ஆசிரியை ஜெயகுமாரி, உதவித் தலைமை ஆசிரியை ஹெலன்அருள் எமிமாள், ஆசிரியர்கள் மேரிசுஜித்ரா, ஏஞ்சலின்ஸ் டெபிகிராபி, சரோஜா, ஏசுவடியான் பொன்னுத்துரை, ஆக்னஸ் ஆகிய 8 பேரை புதன்கிழமை கைது செய்தனர். அனைவரும் நான்குனேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.