பள்ளிகளுக்கு கோடை விடுமுறை துவங்கியுள்ளது. அதனால், பிரதான பகுதிகளில் ஓரளவுக்கு நெரிசல் குறைந்துள்ளது.
சேலம் மாநகராட்சியில், தனிக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், தரை வழி மின் கேபிள் பதிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகிறது. மாநகரின் பிரதான சாலைகளில், அடிக்கடி, "ஆப்ரேஷன்' செய்யும் அதிகாரிகளால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. காலை நேரங்களில், பள்ளிக்கு செல்லும் ஆட்டோ, வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்கள், நெரிசலில் சிக்கி, பள்ளிகளுக்கு தாமதமாக செல்லும் பரிதாப நிலை நிலவி வருகிறது.மருத்துவ வசதி உள்ளிட்ட அவசர நிலை பயணம் மேற்கொள்ள நினைப்பவர்கள் கூட, நெரிசலில் சிக்கி, கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். நெரிசலை தவிர்க்க, திட்டப்பணிகள் துவங்கியவுடன், சாலைகளை விரைந்து சீரமைக்கவும், பேட்ஜ் ஒர்க் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தும், எந்த பலனும் கிடையாது.
தற்போது, பெரும்பாலான பள்ளிகளுக்கு, கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ப்ளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வும் நடந்து வருகிறது. தேர்வு முடிந்ததும், பள்ளிகளில் கோடை விடுமுறை துவங்கும்.அதனால், மாநகரில் தற்போது போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்துள்ளது. மாநகரில் மெகா பட்ஜெட் திட்டப்பணிகளை, இந்த கோடை விடுமுறையில், விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக, சாலைகள் பறிக்கப்படுவதால், நெரிசல் ஏற்படும் பிரதான பகுதிகளில், தற்போது குழாய் பதிப்பு, கேபிள் பதிப்பு உள்ளிட்ட பணிகளை முடித்துவிட்டு, பேட்ஜ் ஒர்க் போடும் பட்சத்தில், பள்ளி திறந்த பிறகு, போக்குவரத்து நெரிசல் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்படும்.மெகா பட்ஜெட் திட்டங்களை செயல்படுத்தி வரும் மாநகராட்சி நிர்வாகம், மின்வாரியம் ஆகியவை, இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
No comments:
Post a Comment