Pages

Tuesday, March 24, 2015

பறக்கும் படையிடம் மாணவர்கள் பிடிபட்டால் கண்காணிப்பாளர் இடைநீக்கம்: அரசுத் தேர்வுகள் இயக்கக உத்தரவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு

பிளஸ் 2 பொதுத் தேர்வில் காப்பியடித்த மாணவர்கள் தேர்வறை கண்காணிப்பாளர்களைத் தவிர, பறக்கும்படை உள்ளிட்ட பிற அலுவலர்களால் பிடிக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்படட தேர்வறை கண்காணிப்பாளரை உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்ற அரசுத் தேர்வுகள் இயக்கக உத்தரவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி, வியாழக்கிழமை (மார்ச் 26) ஒரு மணி நேரம் விடைத்தாள் திருத்தும் பணிகளைப் புறக்கணிக்க உள்ளதாக தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவித்துள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் கடந்த 8 நாள்களாக காப்பியடித்ததாகக் கூறி 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பிடிபட்டுள்ளனர். ஒசூரில் உள்ள தனியார் பள்ளியில் கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) மூலம் வினாத்தாளை அனுப்பி ஒரு மதிப்பெண் விடைகளைப் பெறவும் முயற்சிகள் நடைபெற்றுள்ளன.
இதைத்தொடர்ந்து, தேர்வுப் பணிகளில் உள்ள ஆசிரியர்கள் விழிப்போடு பணியாற்றும் வகையில், அரசுத் தேர்வுகள் இயக்ககம் மார்ச் 20-ஆம் தேதி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை வெளியிட்டது.
அதில், பிளஸ் 2 வகுப்புக்கு இதுவரை நடைபெற்ற தேர்வுகளில் தேர்வறை கண்காணிப்பாளர் தவிர, பிற அதிகாரிகளால் காப்பியடிக்கும் மாணவர்கள் பிடிக்கப்பட்டிருந்தால், அந்தக் குறிப்பிட்ட தேர்வறைக் கண்காணிப்பாளர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்தக் கழகத்தின் மாநிலத் தலைவர் கே.பி.ஓ.சுரேஷ் வெளியிட்ட அறிக்கை:
அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இந்த உத்தரவு தேர்வுப் பணியில் ஈடுபட்டுள்ள 30 ஆயிரம் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை அச்சமடைய வைத்துள்ளது. மாணவர்களை உடல் ரீதியாக சோதனை செய்யக் கூடாது என்ற விதியுள்ளது.
பறக்கும்படை, உயர் அதிகாரிகள் வரும்போது அறைக்குள் மாணவர் செய்யும் தவறுக்கு தேர்வுப் பணியில் உள்ள ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வது இயற்கை நீதிக்குப் புறம்பானதாகும். எனவே, இந்த ஆணையைத் திரும்பப் பெற வேண்டும்.
ஆசிரியர்களின் அதிருப்தியை வெளிக்காட்டும் வகையில் விடைத்தாள் திருத்தும் மையங்களில் வியாழக்கிழமை (மார்ச் 26) ஒரு மணி நேரம் பணிகளைப் புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுத் துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, இதுவரை எந்தவொரு ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.