Pages

Tuesday, March 3, 2015

பள்ளிப் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

வகுப்பறையில் 2 சிறுவர்களை வைத்து பூட்டியதாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து, பள்ளிப் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அடுத்துள்ள கள்ளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி 2 மாணவர்களை வகுப்பறைக்குள் வைத்து பூட்டியதாக புகார் எழுந்தது. மாணவர்களின் சத்தம் கேட்டு, சிறிது நேரத்துக்கு பின் கதவுகளை திறந்து வெளியேற்றியதாகவும் கூறப்பட்டது.
இது குறித்து எழுந்த புகாரின்பேரில், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மூலம், பள்ளித் தலைமை ஆசிரியை செல்வி சுந்தரி மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், பள்ளி முடிந்த பின் வகுப்பறைகளை, அந்தந்த ஆசிரியர்கள் பூட்டுவதற்கு பதிலாக, மாணவர்களே பூட்டிச் சென்ற விவரம் தெரிய வந்தது. எனினும், வகுப்பறையில் வைத்து மாணவர்கள் பூட்டப்பட்டதாக, பெற்றோர்கள் தரப்பில் யாரும் புகார் அளிக்கவில்லை.
இது குறித்த விசாரணை அறிக்கை, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் க. ஜெயமீனா தேவியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் க. ஜெயமீனா தேவி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், வகுப்பறையிலிருந்து மாணவர்கள் சென்றதை உறுதி செய்த பின், சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர்களே அறைகளை பூட்ட வேண்டும். பள்ளிப் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இது குறித்து, அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.