கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ.,), எங்கே இருக்கின்றனர் என்பதை கண்டுபிடிக்க முடியாமல், தினமும் அலுவலகங்களுக்கு அலையும் மக்களுக்கு மத்தியில், ஈரோடு மாவட்டத்தில், இரு வி.ஏ.ஓ.,க்கள், வித்தியாசமாக செயல்பட்டு வருகின்றனர்.
ஏமாற்றம்:
பல்வேறு சான்றிதழ் கள் வாங்க, மக்கள், வி.ஏ.ஓ., மற்றும் ஆர்.ஐ., (வருவாய் ஆய்வாளர்) மற்றும் தாசில்தார் அலுவலகங்களுக்கு செல்வர். இதில், வி.ஏ.ஓ., மற்றும் ஆர்.ஐ.,க்களை மட்டும் பிடிக்கவே முடியாது. எங்கே இருக்கின்றனர் என்றே தெரியாமல், மக்கள் தினமும் அலுவலகங்களுக்கு சென்று ஏமாற்றம் அடைவர். கேட்டால், 'தினமும், பல இடங்களில் ஆய்வு; உயரதிகாரிகள் கூட்டம்' எனக் கூறுவர். இப்படிப்பட்ட வி.ஏ.ஓ.,க்களுக்கு மத்தி யில், ஈரோடு மாவட்டம், கோபி தாலுகாவிற்கு உட்பட்ட இரு வி.ஏ.ஓ.,க்கள், வித்தியாசமாக செயல்படுகின்றனர். கோபி தாலுகா, நம்பியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, கோசனம் பஞ்சாயத்தில், கோசனம், 'அ' மற்றும், 'ஆ' ஆகிய இரு பகுதிகளுக்கு, இரு வி.ஏ.ஓ.,க்கள் பணியில் உள்ளனர். கோசனம், 'அ' கிராமத்தில், சந்திரகாந்தா என்ற வி.ஏ.ஓ.,வும், கோசனம், 'ஆ' கிராமத்தில், கிருஷ்ணன் என்ற வி.ஏ.ஓ.,வும் பணிபுரிந்து வருகின்றனர். கோசனம் பஞ்சாயத்து அலுவலகத்தில், இருவருக்கும் அலுவலகம் உள்ளது.
அறிவிப்பு பலகை:
இருவரும், தாங்கள் எங்கே இருக்கிறோம் என்பதை, மக்களுக்கு தெரியப்படுத்துகின்றனர். அலுவலகத்தின் வெளிப்புறத்தில் உள்ள அறிவிப்பு பலகையில், நாள், சென்றுள்ள இடம், திரும்பும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு, கூடுதலாக வி.ஏ.ஓ., மற்றும் தலையாரியின் மொபைல் போன் எண்களையும் குறிப்பிடுகின்றனர். இது, மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எப்போது அலுவலகத்தில் இருப்பர் என்பதை, முன்கூட்டியே அறிந்து, அந்த நேரத்திற்கு மக்கள் செல்கின்றனர். இதை, மற்ற கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் அலுவலர்கள் கடைபிடித்தால், மக்கள் வரவேற்பர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.